இந்திய கிரிக்கெட் அணி 2012 முதல் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோக்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டது. அது கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் சந்தித்த வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவிடம் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோற்றுள்ளது.
இந்த அடுத்தடுத்த ஒய்ட்வாஷ் தோல்விகளால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ள இந்திய ரசிகர்கள் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதவி விலக வேண்டுமென சமூக வலைதளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஏனெனில் அவர் வந்த பின்பே இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக சோதனை என்ற பெயரில் அவர் அடிக்கடி செய்யும் மாற்றங்கள் தவறான தேர்வுகள் தோல்விக்கு வித்திடுகின்றன.
2027 வரை கம்பீர் தான்:
அது பற்றி கேட்டதற்கு தன்னுடைய பயிற்சியாளர் பதவி பற்றி பிசிசிஐ முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படுதோல்விக்காக அவசரப்பட்டு 2027 உலகக் கோப்பைக்கு முன் கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப் போவதில்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். தோல்விக்கு களத்தில் விளையாடாத பயிற்சியாளர் மேல் எந்த தவறுமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தற்போதைய புதிய அணி கற்றுக்கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாடத் துவங்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வானிலை, ஒட்டுமொத்த சூழ்நிலை, மைதானத்தின் மண், பிட்ச்சில் உள்ள புற்களின் நீளம் ஆகியவற்றைப் பார்த்து அதற்குத் தகுந்தார் போல் விளையாட வீரர்கள் தான் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்”
பிசிசிஐ அறிவிப்பு:
“ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டராக நீங்கள் எந்த வகையான பிட்ச்சிலும் விளையாடத் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் சுனில் கவாஸ்கர், திலிப் வெங்சர்கார் போன்றவர்கள் இந்தியா அல்லது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் உள்ள வித்தியாசமான சூழ்நிலைகளிலும் விளையாடும் டெக்னிக்கை கொண்டிருந்தார்கள். அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகாகும்”
இதையும் படிங்க: எம்.எஸ் தோனி போன்றே தெம்பா பவுமா இதை செய்யறாரு.. அவர் மிகப்பெரிய கேப்டனா வருவாரு – ஏ.பி.டி கருத்து
“அத்துடன் விராட், ரோஹித், அஸ்வின் ஆகியோர் விடை பெற்றுள்ளார்கள். புதிய வீரர்கள் வந்துள்ளதால் நம்முடைய அணி மாற்றத்தை நோக்கி செல்கிறது. எனவே மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க கொஞ்ச நேரமெடுக்கும். பிசிசிஐ உடனடியாக முடிவெடுக்காமல் நீண்ட கால திட்டத்தைப் பார்க்கும். வெற்றி, தோல்வி விளையாட்டின் அங்கம். மாற்றம் தேவைப்பட்டால் அந்தக் வட்டத்தின் (2027) இறுதியில் நாங்கள் முடிவெடுப்போம் என்று கூறினார்.



