இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்திய மண்ணிலும் இந்திய அணியை வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தெம்பா பவுமாவை வாழ்த்திய ஏ.பி.டி :
அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த இந்திய ஆடுகளங்களில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமின்றி அற்புதமான பந்துவீச்சையும் வெளிப்படுத்தி அசத்தியது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தெம்பா பவுமா தலைமையில் தோல்வியையே சந்திக்காமல் வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான தெம்பா பவுமாவை முன்னாள் இந்திய கேப்டனான மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டு முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான ஏ.பி.டி வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
2000 ஆவது ஆண்டுக்கு பிறகு தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் தென்னாப்பிரிக்க அணி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் பவுமா தென்னாப்பிரிக்கா அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி இருந்தார். அவரது தலைமையில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் தென்னாப்பிரிக்க அணி வெற்றி நடை போட்டு வருகிறது.
என்னை பொறுத்தவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் குணத்தை கொண்டவராக நான் பாவுமாவை பார்க்கிறேன். ஏனெனில் பவுமா நிறைய பேசி நான் கேட்டது கிடையாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவர் குரல் கேட்பது கடினம் என்று நினைக்கிறேன். களத்தில் அவரை சிறிய மனிதராக யாரும் மதிப்பிடக்கூடாது.
இதையும் படிங்க : 6 ரன்ஸ்.. 10 முறை டக் அவுட்டாவதில் அப்ரிடியை மிஞ்சிய பாபர் மோசமான சாதனை.. இலங்கை ஃபைனலுக்கு தகுதி
அவர் அமைதியாக இருந்தாலும் கேப்டன்சியில் பலவிதமான பாணியில் அணிக்கு கை கொடுக்கிறார். தோனி எப்படி ஒரு அணி சூழலை உருவாக்கி இருந்தாரோ அதேபோன்று பவுமாவும் ஒரு நல்ல சூழலை உருவாக்கியுள்ளார். எனவே எதிர்காலத்தில் மிகப்பெரிய கேப்டனாக பார்க்கப்படும் அளவிற்கு ரசிகர்கள் அவர் பெயரை பேசும் நேரம் வரலாம் என்றும் ஏபிடி கூறியது குறிப்பிடத்தக்கது.



