இந்திய கிரிக்கெட் அணி கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் ஏமாற்றமடைந்த பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு புதிய 10 கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்தது. அதில் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கி பயிற்சி எடுத்து விளையாட வேண்டும் என்பது முக்கியமான விதிமுறையாகும்.
மேலும் வெளிநாடுகளில் 45 நாட்களுக்கு மேல் நடைபெறும் தொடர்களில் ஒருமுறை மட்டும் வீரர்களை அவர்களது குடும்பங்கள் பார்க்கலாம். அதுவும் அதிகபட்சமாக 12 நாட்களுக்குள் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்தது. அது போன்ற விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கோலி கோரிக்கை:
அந்த நிலையில் இந்த விதிமுறைகளில் வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் வீரர்கள் தங்களது குடும்பங்களை பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு விராட் கோலி அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதனால் விராட் கோலியின் கோரிக்கையை ஏற்று அந்த விதிமுறையை மட்டும் பிசிசிஐ மறுபரிசலனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதை பிசிசிஐ புதிய செயலாளர் தேவஜித் சைக்கியா முற்றிலும் மறுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த கட்டத்தில் தற்போதைய கொள்கை அப்படியே இருக்கும். ஏனெனில் இது தேசத்திற்கும் எங்கள் நிறுவனமான பிசிசிஐக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜனநாயக அமைப்பில், மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு”
பிசிசிஐ நிரகரிப்பு:
“சில மனக்கசப்பு அல்லது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் என்பதை பிசிசிஐ அங்கீகரிக்கிறது. இந்தக் கொள்கை அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் – வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது”
இதையும் படிங்க: அந்த விதிமுறையை வெச்சு நாங்க 300 ரன்ஸ் அடிச்சு வரலாற்று சாதனை படைப்போம்.. குஜராத் கேப்டன் கில் நம்பிக்கை
“இந்தக் கொள்கை ஒரே இரவில் உருவாக்கப்படவில்லை. இது பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. இது நமது தலைவர் ரோஜர் பின்னி விளையாடிய காலத்திலிருந்தே இருக்கிறது. சிறப்பு சூழ்நிலைகளில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான ஏற்பாடுகளுடன், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கும் காலத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது” எனக் கூறினார்.