ஐ.பி.எல் தொடரின் போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் ? தாமதத்திற்கு காரணம் என்ன ? – பி.சி.சி.ஐ விளக்கம்

IPL-1

இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்தும் இந்தியா முழுவதும் தொடர் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி தள்ளிவைக்க படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்தும் கொரோனா இந்தியாவில் அதிகரித்ததால் இந்தியாவில் இத்தொடரை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

IPL

அதனைத் தொடர்ந்து இலங்கை, நியூசிலாந்து போன்ற சில நாடுகள் தாங்களாக முன்வந்து ஐ.பி.எல் தொடரை அவர்களது நாட்டில் நடத்துமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் ஐ.பி.எல் நிர்வாகம் மத்திய அரசின் அனுமதியோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்த அனுமதி கோறியது அதன்படி இந்த கோரிக்கைக்கு செவிகொடுத்த அந்நாட்டு நிர்வாகமும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐ.பி.எல் தொடரை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் மொத்தமாக 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியே துபாய் சென்றுவிட்டன. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இன்னும் ஐபிஎல் தொடருக்கான முறையான போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் கேள்வி எழுப்பி உள்ளது.

Dubai

மேலும் ரசிகர்கள் எப்போது ஐபிஎல் அட்டவணை வெளியாகும் என்ற தகவலுக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஐபிஎல் தொடரின் கால அட்டவணை இன்று இரவு (செப்டம்பர் 4) அல்லது நாளை காலையில் (செப்டம்பர் 5) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த தாமதத்திற்கு காரணம் யாதெனில் சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் காரணமாக போட்டிகளுக்கான அட்டவணையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த தாமதம் ஏற்பட்டது என்றும் இருப்பினும் முறைப்படி இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பினால் தற்போது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.