இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் அமோகமான வரவேற்பினால் இந்த ஆண்டு பதின்மூன்றாவது சீசனாக ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த தொடர் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினந்தோறும் ஐ.பி.எல் நடைபெறுவது குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளன.
மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் குறித்து தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் இந்த ஐபிஎல் தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்க்கு பேட்டியளித்துள்ள கங்குலி ஐபிஎல் தொடர் குறித்து கூறுகையில் : நாங்கள் ஒவ்வொரு முன்னேற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது.
சொல்வதற்கு என்ன இருக்கிறது. நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிற்குள்ளேயே சிக்கி தவிக்கிறார்கள் அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இதனால் யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை மே மாதம் நடுப்பகுதி வரை இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒருவேளை ஐ.பி.எல் நடத்த முடிவு எடுக்கப்பட்டாலும் வீரர்களை எங்க இருந்து வர வைப்பீர்கள். வீரர்கள் ஒவ்வொரு மைதானத்திற்கும் எப்படி பயணம் செய்வார்கள் ? இந்த நேரம் உலகில் எந்த ஒரு விளையாட்டிற்க்கும் சாதகமாக இல்லை. எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடரை மறந்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த தொடரி அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி இன்று வெளியான அறிக்கையின்படி இந்தியாவில் மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பி.சி.சி.ஐ அதனை கணக்கில் கொண்டு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் மே 3ம் தேதிக்கு பின்னர் ஐபிஎல் தொடரை நடத்தலாமா ? வேண்டாமா ? என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அந்த ஆலோசனைக்குப் பிறகு(மே 3 ஆம் தேதிக்கு பிறகு) இந்த ஐபிஎல் தொடர் தகவல் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி அரசு கொரோனா பாதிப்பு எப்போது நீங்குகிறது என்று அறிவிக்கிறதோ அப்போதுவரை ஐ.பி.எல் நடத்த வாய்ப்பே இல்லை என்றும் அதுவரை காலவரையறை இன்றி ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.