கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இந்த மார்ச் இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு அந்த வைரஸின் தாக்கம் குறைவதாக தெரியவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதாக ரத்து செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

இதன் காரணமாக பிசிசிஐ மற்றும் அவர்களை நம்பியுள்ள விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் என அனைவருக்கும் கடும் இழப்பு ஏற்படும். பிசிசிஐக்கு மட்டும் கிட்டத்தட்ட 4000 கோடி இழப்பு ஏற்படலாம்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் முழுவதும் ரத்தாகி விட்டால் இந்தியாவிற்குப் பதிலாக வெளிநாட்டில் கூட நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

முன்னதாக 2009 இல் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்ததால் ஐபிஎல் போட்டியில் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெற வேண்டும். இந்த போட்டியில் அனைத்தையும் நடத்தினால் தான் யாருக்கும் நஷ்டம் இல்லாமல் இருக்கும்.
சூழலை பொறுத்து பார்த்து, போட்டிகள் முழுவதையும் இந்தியாவில் நடத்தலாமா, இல்லை முழுவதும் வெளிநாட்டில் நடத்தலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என ஒரு பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

அப்படி ஐ.பி.எல் தொடரினை நடத்துவதற்கும் வெளிநாட்டு சூழல் சாதகமாக அமைய வேண்டும். ஏனெனில் உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு நிர்வாகங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த தொடர் நடைபெற சாத்தியம் உண்டு இல்லையெனில் இந்த தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



