உலக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியாவில் 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கெதிராக ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொடருக்கான முன்னேற்பாடுகளை தற்போதே பிசிசிஐ ஆரம்பித்து விட்டது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கட்டளை போட்ட பி.சி.சி.ஐ :
ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துவிட்டது. இந்த அடுத்தடுத்த தோல்விகள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி நிர்வாகத்திற்கும் ஏமாற்றத்தை அளித்தது.
ஆனால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி அந்த கோப்பையை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் சீனியர் வீரர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சில சோதனைகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில டெஸ்ட் தொடர்களாகவே அதிகளவு விமர்சனத்தை சந்தித்து வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் :
அதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் இந்திய ஏ அணியுடன் இணைந்து இங்கிலாந்து பயணித்து அங்கு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாட வேண்டும் என்றும் நான்கு நாட்கள் கொண்ட இந்த பயிற்சி போட்டி இரண்டு முறை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பயிற்சி போட்டியிலுமே அவர்கள் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ கட்டளை விதிக்க இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க : இந்த வருஷம் ஆர்.சி.பி அணியில் அந்த 2 வீரர்களும் டேஞ்சரான பேட்ஸ்மேனாக இருப்பார்கள் – இர்பான் பதான் கணிப்பு
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான பயிற்சி இல்லாமல் அவர்கள் விளையாடுவதால் தான் அவர்களால் சோபிக்க முடியாமல் போகிறது என்று பேசப்பட்டு வருகிறது. இவ்வேளையில் இந்த விமர்சனங்கள் எல்லாம் இம்முறை இருக்கக்கூடாது என்பதற்காகவே அவர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மே 25-ஆம் தேதி முடிவந்த பின்னர் மே 30 மற்றும் ஜூன் 6-ஆம் தேதி இந்திய ஏ அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.