இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அண்மையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி இருந்தது.
பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படாத சர்பராஸ் கான் :
இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிராகவும் அவர்கள் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது. மேலும் இந்த தொடரில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களும் செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வந்து பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள் என்றும் கூறியிருந்தது.
அதன்படி அறிவிக்கப்பட்ட இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் தற்போது துலீப் டிராபிக் தொடரில் விளையாடி வருவதால் அந்த தொடரில் இருந்து வெளியேறி சென்னை வந்து பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்கள் என்றும் அதன் காரணமாக துலீப் டிராபி தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்றும் கூறியிருந்தது.
அப்படி தற்போது துலீப் டிராபி தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் அனைவரும் நாளை பயிற்சி முகாமிற்கு திரும்ப இருக்கும் வேளையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ள சர்ஃபராஸ் கான் மட்டும் தொடர்ந்து துலீப் டிராபி தொடரில் விளையாடுமாறு பிசிசிஐ-யின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இப்படி இந்திய அணியில் இடம் பிடித்தும் அவர் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படாததற்கு காரணம் என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி எப்படியும் நிச்சயம் முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறப் போவதில்லை. எனவே அவர் பயிற்சி முகாமிற்கு வருவதை காட்டிலும் துலீப் டிராபி தொடரில் பேட்டிங் செய்தால் அவருக்கு அது ஒரு சிறந்த பயிற்சியாக அமையும் என்பதாலேயே தேர்வுக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அவருக்காக வருந்துகிறேன்.. ராகுல் – சர்பராஸ் ஆகியோரில் வங்கதேச தொடரில் யார் விளையாடலாம்? ஸ்ரீகாந்த் பதில்
இதன் காரணமாக அவர் துலீப் டிராபி தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகளில் விளையாடிவிட்டு 16-ஆம் தேதிக்கு பிறகே சென்னை வருவார் என்றும் அப்படி வந்தாலும் அவர் முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.