இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இருப்பினும் சமீபத்திய பாகிஸ்தான் தொடரில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரிடையே பிளேயிங் லெவனில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய கேஎல் ராகுல் காயமடைந்து வெளியேறினார்.
கேஎல் ராகுல் – சர்பராஸ் கான்:
அப்போது அறிமுகமான சர்பராஸ் கான் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். ஆனால் தற்போது கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்துள்ளார். இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
இந்நிலையில் அந்த இருவரில் அனுபவமிக்க கேஎல் ராகுல் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சரியானவர் என்று முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “உண்மையில் சர்பராஸ் கானுக்காக நான் வருந்துகிறேன். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரங்களில் இப்படி நடக்கும்”
ஸ்ரீகாந்த் பதில்:
“குறிப்பாக நீங்கள் நன்றாக விளையாடினாலும் சீனியர் வீரர்கள் வரும் போது உங்களுடைய இடத்தை இழப்பீர்கள். எடுத்துக்காட்டாக ரிஷப் பண்ட் வருவதால் துருவ் ஜுரேல் தம்முடைய இடத்தை இழக்கிறார். அதே போல கேஎல் ராகுல் வருவதால் சர்பராஸ் தம்முடைய இடத்தை இழக்கிறார். இருப்பினும் அவர்கள் ஆஸ்திரேலிய தொடரில் பேக்-அப் வீரர்களாக இருப்பார்கள்”
இதையும் படிங்க: அது முடிஞ்ச கதை.. கூக்கபரா கிடையாது.. இந்தியாவை அந்த பந்தில் வீழ்த்துவது ரொம்ப கஷ்டம்.. லிட்டன் தாஸ்
“அடுத்ததாக நியூசிலாந்து தொடரும் வருகிறது. கேஎல் ராகுல் வெளிநாடுகளில் நன்றாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவிலும் அவர் நன்றாக பேட்டிங் செய்துள்ளார்” என்று கூறினார். இந்த நிலையில் சமீப காலங்களில் கேஎல் ராகுல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டு வரும் தேர்வுக்குழு டெஸ்ட் அணியிலும் கழற்றி விட்டு சர்பராஸ் கானுக்கு முழு நேரமாக வாய்ப்பு கொடுக்கும் காலம் விரைவில் வரலாம் என்றால் மிகையாகாது.