
கடந்த சில மாதங்களாகவே இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக மோசமான காலகட்டம் நிலவி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற மிக முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்பட்ட சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது, அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் படுதோல்வியை சந்தித்திருந்தது.
இப்படி இந்திய அணியின் தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பறிபோன வேளையில் அடுத்ததாக இந்திய அணியை எதிர்கால சாதனையை நோக்கி கொண்டு செல்ல இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் அலுவலகத்தில் நேற்று கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பி.சி.சி.ஐ உயர் அதிகாரிகள் ஆகியோருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் இனி இந்திய வீரர்கள் யாரும் தங்களது விருப்பத்திற்கு இருதரப்பு தொடர்களில் இருந்து விலக முடியாது என்ற புதிய கட்டளையை பி.சி.சி.ஐ விதித்துள்ளது. ஏனெனில் பொதுவாகவே இந்திய அணியின் அனுபவ வீரர்கள் பலரும் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் தங்களது இஷ்டத்திற்கு ஓய்வு எடுத்து வந்தனர்.
மேலும் முக்கிய தொடர்களில் மட்டுமே அவர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். இதன் காரணமாக இந்திய அணி முக்கிய தொடர்களில் தோல்வியையும் தழுவி வந்தது. இதற்காகத்தான் பி.சி.சி.ஐ இந்த முடிவை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் இனிவரும் இருதரப்பு தொடர்களில் எந்த வலுவிழந்த அணிகள் விளையாடினாலும் முக்கிய வீரர்கள் உரிய மருத்துவ காரணங்கள் இன்றி விலக முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அசத்தலான திறமை இருக்கும் நிதீஷ் ரெட்டிக்கு இந்த வாய்ப்பையும் குடுங்க – எம்.எஸ்.கே பிரசாத் ஆதரவு
அதேபோன்று உள்ளூர் போட்டிகளையும் புறக்கணிக்காமல் தேவைப்படும் நேரத்தில் விளையாட வேண்டும் என்ற முடிவினை பி.சி.சி.ஐ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இருதரப்பு தொடர்களில் ஓய்வெடுத்து வந்த முக்கிய வீரர்கள் அனைவரும் இனிவரும் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.