21 வயதான இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான நிதீஷ்குமார் ரெட்டி அண்மையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் அவர் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தார். ஆனால் பேட்டிங்கை பொறுத்த வரை 37 ரன்கள் சராசரியுடன் 298 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
நிதீஷ் ரெட்டிக்கு இந்த வாய்ப்பையும் குடுங்க :
அதிலும் குறிப்பாக பின்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கும் அவர் பவுலர்களை வைத்துக் கொண்டே ஆஸ்திரேலியா மண்ணில் சதம் விளாசியிருந்தது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. இதன் காரணமாக இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் அவரே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக விளையாட வேண்டும் என்று ஆதரவுகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் டி20, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ள அவர் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமாக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை டெஸ்ட் மற்றும் டி20 என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் கலவையான வீரர்கள் அணிக்கு தேவை. ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை அதிரடியாகவும் விளையாட வேண்டும். அதேவேளையில் இன்னிங்க்ஸை நிலைப்படுத்தியும் விளையாட தெரிய வேண்டும்.
அந்த வகையில் இந்த இரண்டு திறனும் நிதீஷ்குமார் ரெட்டியிடம் உள்ளதால் நிச்சயம் அவரால் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளைப் போன்று ஒருநாள் போட்டிகளிலும் அசத்த முடியும். எனவே அவருக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் கொடுங்கள் என்று எம்.எஸ்.கே பிரசாத் அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இதையும் படிங்க : அஜித் அகார்கரின் பல ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைக்க காத்திருக்கும் – முகமது ஷமி
அவர் கூறியது போலவே எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மாற்று ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் அவருக்கு முன்கூட்டியே ஒருநாள் அனுபவம் வேண்டும் என்பதினால் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



