ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தது.
இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள பி.சி.சி.ஐ :
இப்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற தோல்வி இந்திய அணியின் மீது மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்திய அணியின் மீதும், இந்திய அணியின் வீரர்கள் மீதும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க மிக முக்கியமான காரணமாக மாறியது.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கட்டளையிட்டு இருந்தார். அதற்கடுத்து தற்போது இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் புதிய விதிமுறை ஒன்றினை அமல்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இனி இந்திய வீரர்கள் யாரும் முறையான அனுமதியின்றி பெரிய தொடர்களை தவிர்த்து மற்ற எவ்வித தொடர்களுக்கும் தங்களது குடும்பத்தை சேர்ந்த மனைவியையோ, குழந்தைகளையோ, உறவினர்களையோ, நண்பர்களையோ அழைத்துச் செல்லக்கூடாது என்ற புதிய விதிமுறையை வெளியிட்டு அவர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அந்தவகையில் குறைந்தபட்சம் 14 நாட்களில் இருந்து, அதிகபட்சம் 45 நாட்கள் வரை கொண்ட எந்த தொடர்களுக்கும் பிசிசிஐ-யின் முறையான அனுமதி பெற்றே இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் மற்றபடி நடைபெறும் எந்த தொடர்களுக்கும் வீரர்கள் தங்களது குடும்பத்தாருடன் செல்லக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை தொடர்ந்து சுப்மன் கில்லும் கம்பீரின் பேச்சை கேட்டு எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ
அதனைத்தவிர்த்து தனி விமானத்திலோ அல்லது தங்களது சொந்த வாகனங்களையோ போட்டிகளின் போது பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாகவே வெளிநாட்டு தொடர்களுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எல் ராகுல் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் பயணித்து வரும் வேளையில் அந்த சொகுசுகளுக்கெல்லாம் தற்போது பி.சி.சி.ஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



