ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு அடுத்தபடியாக 2007 டி20, 2011 உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாகவும் வென்றுள்ள அவர் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
அதனால் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் இலங்கை மண்ணில் நடந்த டி20 தொடரில் இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. ஆனால் ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடிய இந்தியா 27 வருடங்கள் கழித்து இலங்கையிடம் தோற்றது. அதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 2 – 0 (2) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்தியா வென்றது.
பிசிசிஐ அதிருப்தி:
குறிப்பாக கான்பூரில் மழையால் 2 நாட்கள் பாதிக்கப்பட்ட போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வென்றது அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றது. அதனால் வரலாற்றிலேயே சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் இந்தியா தோற்றது. மேலும் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியில் கம்பீர்:
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்தியா வெல்ல வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் வெல்ல தவறினால் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கௌதம் கம்பீரை நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக டெய்னிக் ஜக்ரான் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரிங்கு சிங் ஒன்னும் ரசல், பாண்டியா கிடையாது.. அவருக்கு இந்த வாய்ப்பை கொடுங்க.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
மேலும் விவிஎஸ் லக்ஷ்மனை டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் கௌதம் கம்பீர் ஒருநாள், டி20 அணிகளுக்கு மட்டும் பயிற்சியாளராக தொடர் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிகிறது. குறிப்பாக கம்பீர் பொறுமையுடன் விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான அணுகு முறையை பின்பற்றவில்லை என்று பிசிசிஐ கருதுகிறது. ஆனால் லக்ஷ்மன் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் என்பதை அனைவரும் அறிவோம். அதனாலேயே இந்த முடிவை பிசிசிஐ எடுக்க உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.



