ஹண்ட்ரட், சிக்ஸ்ட்டி எல்லாம் ஓரம் நில்லுங்க – ரசிகர்களை கவர ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் புதிய ரூல்ஸ் கொண்டுவரும் பிசிசிஐ

- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பாக துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் டிராவில் முடிவடைந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக ஒரு நாளில் முடிவை காணும் வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட அபரித வளர்ச்சிக்கேற்ப 3 – 4 நேரத்தில் முடிவைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் ஓவருக்கு ஓவர் எதிர்பாராத திருப்பங்களை விருந்தாக படைத்து அது வரை நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள பின்னுக்கு தள்ளி ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக நம்பர் ஒன் இடத்தை தனதாக்கியுள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

குறிப்பாக 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் உலக கோப்பைகளை மிஞ்சி தரத்திலும் பணத்திலும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு அங்கமாக உருவாகியுள்ளது. அதற்கு போட்டியாக அதில் புதுமையை புகுத்தி இந்தியாவை பின்னுக்கு தள்ளுவதற்காக 10 ஓவர்கள் கொண்ட டி10 கிரிக்கெட், 100 பந்துகள் கொண்ட ஹண்ட்ரட் என புதிய தொடர்களை வெளிநாட்டு வாரியங்கள் நடத்தி வருகின்றன.

அதிலும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற சிக்ஸ்டி எனும் தொடரில் போட்டியின் எந்த தருணத்திலும் அதிர்ஷ்டமாகவும் ஆச்சரியமாகவும் “பிரீ ஹிட்” கொடுக்கப்படும் என்றும் அதை ரசிகர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்யலாம் என்பது போன்ற வித்தியாசமான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் உலக அளவில் ஏற்பட்டு வரும் போட்டிகளை சமாளிப்பதற்காகவும் ரசிகர்களை கவர்வதற்காகவும் ஐபிஎல் தொடரில் புதுமை காண்பதற்காகவும் பிசிசிஐ தற்போது புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

Ganguly-ipl
IPL MI

இம்பேக்ட் பிளேயர்:
“இம்பேக்ட் பிளேயர்” அதாவது “தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறையின்படி ஒரு இன்னிங்ஸ் நடந்து கொண்டிருக்கும் போது விளையாடும் 11 பேர் அணியில் இடம் பெறாத ஒரு வீரரை மற்றொரு வீரருக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கம்போல டாஸ் வீசப்பட்டு 11 பேர் அணியை அறிவித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட தருணத்தில் “அந்த வீரர்” விளையாடினால் சிறப்பாக இருக்குமே என்று ஒரு அணி நிர்வாகம் நினைத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 11 பேர் அணியிலிருந்து ஒருவருக்கு பதிலாக அவரை சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதற்கு முதலில் டாஸ் வீசும் போது 11 பேரை தவிர்த்து 4 சப்ஸ்டியூட் வீரர்களின் பெயரையும் நடுவரிடம் கொடுத்துவிட வேண்டும். அதன்பின் போட்டி நடைபெறும் போது 11 பேர் அணியில் மாற்ற நினைக்கும் ஒரு வீரரை அந்த 4 பேரிலிருந்து விரும்பும் வீரரை நடுவர் அனுமதியுடன் சேர்த்துக்கொள்ளலாம். அதேசமயம் இந்த விதிமுறையை பயன்படுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. அத்துடன் ஒரு போட்டியில் இந்த விதிமுறையை பயன்படுத்த நினைத்தால் இரு அணிகளும் 14வது ஓவருக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும்.

BCCI

அந்த புதிய வீரர் போட்டியின் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யலாம், போட்டியின் நேரத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக 4 ஓவர்கள் வரை கூட பந்து வீசலாம். ஆனால் புதிய வீரருக்கு பதில் மாற்றப்படும் பழைய வீரர் மேற்கொண்டு அந்த போட்டியில் சப்ஸ்டியூட் வீரராக கூட விளையாட முடியாது. மேலும் காயமடையும் வீரருக்கு பதிலாக அந்த புதிய “இம்பேக்ட் வீரரை” பயன்படுத்தினால் காயமடைந்த வீரர் மீண்டும் அந்த போட்டியில் விளையாட முடியாது.

அதேபோல் பீல்டிங் செய்யும் அணிக்கு அந்த புதிய வீரர் ஓவருக்கு இடையே அல்லாமல் ஓவரின் முடிவில் மட்டுமே அணிக்குள் சேர்க்கப்படுவார் அல்லது ஏதேனும் வீரர் காயமடைந்தால் உடனடியாக சேர்த்துக்கொள்ளலாம். அதுவே பேட்டிங் செய்யும் அணிக்கு விக்கெட் விழும்போது அல்லது இன்னிங்ஸ் பிரேக் சமயத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை அந்த புதிய வீரர் களமிறங்கிய பின் காயமடைந்தால் அவருக்கு பதில் மற்றொரு வீரரை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எத்தனை வீரர் சேர்த்தாலும் பேட்டிங் செய்வதற்கு 11 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

tamilnadu

அத்துடன் சில சமயங்களில் மழையால் போட்டி 10 ஓவர்கள் வரை குறைக்கப்படும் போது இந்த விதியைப் பயன்படுத்த முடியாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் அக்டோபர் 11இல் துவங்கும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பையிலிருந்து அமல்படுத்தப் படுவதாக தெரிவித்துள்ள பிசிசிஐ இது வெற்றியடையும் பட்சத்தில் 2023 ஐபிஎல் தொடரில் இந்த விதிமுறை கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Advertisement