ஐபிஎல் 2023 தொடரிலிருந்து அறிமுகமாகும் புதிய ரூல் – பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு, முழு விவரம் இதோ

IPL-bcci
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக 10 அணிகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. முன்னதாக கடந்த 2008இல் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று தரத்திலும் பணத்திலும் ஐசிசி மற்றும் உலகக் கோப்பைகளை மிஞ்சி சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளதை அனைவரும் அறிவோம்.

அப்படி அபாரமாய் வளர்ந்துள்ள ஐபிஎல் தொடருக்கு போட்டியாக உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு டி20 தொடர்கள் போட்டிக்கு நடத்தப்பட்டு வருகிறது. அது போக நவீன யுகத்தின் வளர்ச்சிக்கேற்ப 10 ஓவர்கள் கொண்ட தொடர், 100 பந்துகள் கொண்ட தொடர் என்ற புதுபுது தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வருகிறது. அதில் ரசிகர்களை கவர்வதற்காக அடிப்படை விதிமுறைகளில் நிறைய மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய சிக்ஸ்டி எனப்படும் புதிய தொடரில் ஒரு போட்டியில் எப்போது வேண்டுமானாலும் பிரீ ஹீட் கிடைக்கும் ஆனால் அதை ரசிகர்கள் தான் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்வார்கள் என்பது போன்ற வகை வகையான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

- Advertisement -

இம்பேக்ட் வீரர்:
இருப்பினும் அந்த எந்த தொடர்களாலும் ஐபிஎல் தொடரை மிஞ்ச முடியவில்லை என்பது வேறு கதை. ஆனாலும் அந்தத் தொடர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் ஐபிஎல் தொடரிலும் ரசிகர்களை கவர்வதற்காகவும் பிசிசிஐ ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்துகிறது.

1. இம்பேக்ட் ப்ளேயர் அதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற பெயருடன் அந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தேவைப்பட்டால் விளையாடும் 11 பேர் அணியில் விளையாடாத ஒருவரை ஏற்கனவே விளையாடும் ஒருவருக்கு பதிலாக மாற்றிக் கொள்வதே இந்த விதிமுறையின் பயனாகும்.

- Advertisement -

2. இந்த விதிமுறையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு அணிகளும் முதலில் தங்களது 11 பேர் கொண்ட அணியை சமர்ப்பிக்கும் போது இம்பேக்ட் வீரராக போட்டியின் நடுவே பயன்படுத்த விரும்பும் 4 உத்தேச வீரர்களின் பெயர்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

3. அதைத்தொடர்ந்து போட்டி துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏதேனும் ஒரு தருணத்தில் ஏற்கனவே விளையாடும் 11 வீரர்களில் யாராவது ஒருவருக்கு பதில் இவர் வந்தால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் கருதும் ஒரு விளையாடாத வீரரை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட 4 வீரர்களிலிருந்து தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம். அப்படி புதிதாக உள்ளே வரும் வீரர் வழக்கம் போல பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்

- Advertisement -

4. ஆனால் இந்த விதிமுறையை பயன்படுத்த நினைத்தால் ஒரு இன்னிங்ஸின் 14 வது ஓவருக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறையை களத்தில் இருக்கும் நடுவர்களிடம் தெரிவித்து விட்டு இரு அணிகளும் தேவைப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. அதே சமயம் மாற்றப்பட்டு வெளியே வந்த பழைய வீரர் மேற்கொண்டு அந்தப் போட்டியில் சப்ஸ்டியூட் வீரராக கூட களமிறங்க முடியாது. ஒருவேளை மழை பெய்து போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்படும் பட்சத்தில் இந்த விதிமுறையை யாருமே பயன்படுத்த முடியாது.

இந்த விதிமுறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே உருவாக்கி பரிசிலனை செய்த பிசிசிஐ ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2022 சயீத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 தொடரில் அறிமுகப்படுத்தி சோதித்தது. அதை பெரும்பாலான அணிகள் பயன்படுத்தவில்லை என்றாலும் பயன்படுத்திய அணிகள் நல்ல பலனை பெற்றன. அதனால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த விதிமுறை தற்போது ஐபிஎல் தொடரிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 2023 சீசனில் அறிமுகமாகும் இந்த விதிமுறை அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் ஐபிஎல் தொடரில் எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement