
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது சிட்னி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக மேட் ரென்ஷா 56 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 41 ரன்களையும் குவித்தனர்.
அதனை தொடர்ந்து 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 237 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 121 ரன்களையும், விராட் கோலி 74 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் காயம் அடைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
ஆனாலும் பந்தை பிடித்த பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தனது இடது விலா எலும்பில் காயம் அடைந்தார். அதனால் மைதானத்தில் வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவக்குழுவினர் வந்து ஓய்வறைக்கு அழைத்துச் சென்றது. இதனை பார்க்கையில் காயம் பெரியளவில் உள்ளதோ? என்ற பயம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஓய்வறைக்கு சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை என்பதனால் காயத்தின் தன்மை எந்த அளவிற்கு இருக்கிறது? என்ற கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் குறித்து பி.சி.சி.ஐ தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது :
இதையும் படிங்க : எப்போவுமே இங்க விளையாடுறது ரொம்ப ஹேப்பி.. ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு நன்றி கூறிய – ரோஹித் சர்மா
ஷ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயம் குறித்த மதிப்பீடு செய்வதற்காக தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் பி.சி.சி.ஐ குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவமனை என்ன அறிக்கையை வெளியிடுகிறதோ அதனை பொறுத்தே ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆனது? என்று முறைப்படி அந்த தகவல் வெளியாகும் என தெரிகிறது.