இந்திய அணியானது அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. அதனையடுத்து இந்தியாவிற்கு வரும் இலங்கை அணிக்கு எதிராக இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இந்திய அணி காத்திருக்கிறது.
இந்த தொடரானது வரும் ஜனவரி 3-ஆம் தேதி துவங்கி ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இரண்டு வகையான அணிகளையும் நேற்று இரவு இந்திய கிரிக்கெட் நிர்வகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டது.
அப்படி இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானதில் இருந்து பல்வேறு சுவாரசியமான தகவல்களும் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலரும் இடம்பெறாத வேளையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியே விளையாட இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா கேப்டனாக அணிக்கு திரும்புகிறார். அவருடன் சேர்ந்து மேலும் சில நட்சத்திர வீரர்களும் அணிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் ரோஹித்துக்கு அடுத்து இந்திய ஒருநாள் அணிக்கும் பாண்டியா தான் கேப்டன் என்று பி.சி.சி.ஐ மறைமுகமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக இருந்த கே.எல் ராகுல் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டதோடு அவரது துணைக்கேப்டன் பதவியும் ஹார்டிக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஒருநாள் தொடரில் ஒருவேளை ரோஹித் விளையாட முடியாமல் போனால் டி20 தொடரை அடுத்து பாண்டியா இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் பதவி ஏற்பார்.
இதையும் படிங்க : விமானத்தில் Bag-யை தவறவிட்ட சிராஜ். கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் – அதற்கு நிறுவனம் அளித்த பதில்?
ஏற்கனவே இந்திய அணி கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா என பல்வேறு வீரர்களை கேப்டன்சி பதவிக்கு பரிசோதித்தாலும் அதில் ஹார்டிக் பாண்டியா மட்டுமே சிறப்பாக செயல்படுவதால் நிச்சயம் ரோஹித்துக்கு அடுத்து ஹார்டிக் பாண்டியாதான் அனைத்து வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



