ஐபிஎல் தொடரின் 14வது சீசனுக்கான விறுவிறுப்பு தற்போது அதிகரிக்கத் துவங்கி உள்ள நிலையில் இந்த தொடர் ஆனது ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் துவங்கி நடைபெற இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்த பிசிசிஐ பல்வேறு ஆலோசனைகளை செய்துவருகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டதால் இந்திய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அதனால் இந்த ஆண்டு நிச்சயம் இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதற்காக பிசிசிஐ கடுமையாக திட்டங்களை வகுத்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் முற்றிலும் நீங்காத நிலையில் எந்தெந்த நகரங்களில் போட்டிகளை நடத்தினால் சரியாக இருக்கும் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்தது அதில் ஏற்கனவே அகமதாபாத், மும்பை மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்ட நிலையில் தற்போது அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்ட நகரங்களில் நடத்தாமல் இன்னும் மேலும் சில நகரங்களில் நடத்த வேண்டும் என ஐபிஎல் அணிகள் வைத்த கோரிக்கை காரணமாக தற்போது 3 நகரத்திலிருந்து 6 நகரமாக ஐபிஎல் போட்டிகள் நடத்தும் திட்டம் மாறியுள்ளது. அதன்படி மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய மைதானங்களில் இம்முறை ஐபிஎல் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மும்பையில் கொரோனா தாக்கம் இன்னும் குறைந்த காரணத்தினால் அங்கு நடைபெறும் போட்டிகளில் மட்டும் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ள தகவலில் சென்னையிலும் போட்டிகள் நடத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் ஏற்கனவே நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரிலும் நிச்சயம் சென்னை மைதானத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.