
அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரினை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்த சில மாதங்களிலேயே சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது 37 வயதாகும் ரோகித் சர்மா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 38 வயதை எட்டுவார் என்பதனால் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு பேசியிருந்த ரோகித் சர்மா தற்போதைக்கு தான் ஓய்வு பெறுவதற்கு எந்த திட்டத்தையும் வைத்திருக்கவில்லை என்றும் ஓய்வுக்கான எண்ணமும் எனக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
இதன் காரணமாக அவர் தொடர்ந்து விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது. அதேவேளையில் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை குறிவைத்து பி.சி.சி.ஐ சில மாற்றங்களை இந்திய அணிக்குள் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கேப்டனாக வென்றுள்ள ரோகித் சர்மாவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா தான் கேப்டன் பொறுப்பில் இருக்க தகுதியானவர் என்றும் இந்த இங்கிலாந்து தொடருக்கு பின்னர் வேண்டுமென்றால் கேப்டன்சி மாற்றத்தை நிகழ்த்தி பார்க்கலாம் என்றும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே ரசிகர்களுக்காக அன்புடென் செய்துள்ள சிறப்பு ஏற்பாடு.. கலை கட்டப்போகும் சீசன் – விவரம் இதோ
ஏனெனில் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடர் என்பதினால் அந்த தொடரில் எந்த சோதனையையும் செய்யாமல் இங்கிலாந்து தொடரில் அவரது செயல்பாடு எவ்வாறு அமைகிறதோ அதன் பின்னர் அதற்கு ஏற்றார்போல் கேப்டன் மாற்றம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்த ஒரு நபர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே கேப்டன் மாற்றம் நிகழும் என்றும் கூறப்படுகிறது.