கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வரலாறு படைத்த பிசிசிஐ – ஆனாலும் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள், எதற்கு தெரியுமா

IPL jay shah guinness
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டு பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை த்ரில்லாக நடைபெறுவதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட தரத்தில் மிஞ்சியுள்ள ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொட்டிக் கொடுக்கிறது. அதனால் ஐசிசியை விட அதிக வருமானத்தை ஈட்டும் பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது.

ஏனெனில் 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை சமீபத்தில் 48000+ கோடிகளுக்கு ஏலம் போனது. அதனால் என்எஃப்எல் தொடருக்கு அடுத்தபடியாக என்பிஏ, ஈபிஎல் போன்ற அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் நடத்தும் கூடைப்பந்து, கால்பந்து தொடர்களை மிஞ்சுயுள்ள ஐபிஎல் உலகில் அதிக வருமானத்தை கொடுக்கும் 2வது விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனால் இந்த வருடம் 10 அணிகளாக 74 போட்டிக்களுடன் விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடரை வரும் காலங்களில் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக விரிவாக்க சர்வதேச கால அட்டவணையில் தேவையான மாற்றங்களை பிசிசிஐ செய்து வருகிறது.

- Advertisement -

கின்னஸ் சாதனையும் கிண்டலும்:
அப்படி பிரம்மாண்டத்தின் உச்சத்தை எட்டி வரும் ஐபிஎல் தொடரின் 2022 சீசன் ஃபைனலில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பை வென்று சாதனை படைத்தது. அதுவும் புதிதாக ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மேல் அமரும் வகையில் அகமதாபாத் நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற அந்த மாபெரும் ஃபைனலில் சொந்த மண்ணில் குஜராத் கோப்பையை வென்றது. அதை விட அப்போட்டியில் 101,566 ரசிகர்கள் நேரடியாக வந்து கண்டு களித்து தங்களது அணிகளுக்கு ஆதரவு கொடுத்தனர்.

அதன் வாயிலாக உலகிலேயே அதிக ரசிகர்களுடன் ஒரு டி20 போட்டியை வெற்றிகரமாக நடத்திய மைதானம் என்ற உலக சாதனையையும் அகமதாபாத் மைதானம் படைத்தது. இந்நிலையில் அந்த உலக சாதனையை ஏற்றுக்கொண்ட பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது. அதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா ஆகியோர் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்தார்கள்.

- Advertisement -

ஆனால் அதை தெரிவிப்பதற்காக பிசிசிஐ பயன்படுத்திய புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் அகமதாபாத் மைதானத்தை பின்புலமாக வைத்து கின்னஸ் நிறுவனம் ஜெய் ஷா அவர்களிடம் சான்றிதழை கொடுப்பது போல் பதிவிடப்பட்ட அந்த புகைப்படம் மோசமான எடிட் செய்யப்பட்டது என்பது பார்க்கும் அத்தனை ரசிகர்களுக்கும் அப்பட்டமாக தெரிந்தது.

அதனால் ஐபிஎல் தொடரால் ஆயிரக்கணக்கான கோடிகளை அசால்டாக வருமானமாக சம்பாதித்து கின்னஸ் உலக சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ள பிசிசிஐயிடம் ஒரு நல்ல போட்டோஷாப் தெரிந்த தரமான எடிட்டர் கூட இல்லையா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். அதை விட இந்த போட்டோவை ஜெய் ஷா அவர்களின் தந்தை மற்றும் இந்திய அரசில் இடம் வகிக்கும் அமைச்சர் அமித் ஷா எடிட் செய்ததாகவும் சில ரசிகர்கள் புகைப்படத்துடன் கலாய்த்து வருகிறார்கள்.

முன்னதாக கின்னஸ் சாதனை படைத்த 2022 ஃபைனலில் ஐபிஎல் தொடரின் 15ஆவது வருட வெற்றியை கொண்டாடும் வகையில் உலகிலேயே பிரம்மாண்ட ஜெர்சியை அதே அகமதாபாத் மைதானத்தில் பிசிசிஐ வெளியிட்டது. பிசிசிஐ, ஐபிஎல் லோகோ மற்றும் ஐபிஎல் அணிகளின் லோகோ இடம் வகித்த அந்த ஜெர்சியும் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்ஸியாக சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடத்திற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Advertisement