இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்தத் தொடர் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி துவங்குகிறது. அதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளன.
இந்நிலையில் அந்தத் தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் முதல் போட்டியில் மட்டும் மாற்றங்கள் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி முதல் டி20 போட்டி இமாச்சலத்தில் உள்ள அழகான தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த மைதானத்தில் உடைமாற்றும் அறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
புதிய 2 மாற்றங்கள்:
அதன் காரணமாக அந்தப் போட்டி தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில் இருக்கும் ஸ்ரீமந் மாதவராவ் சிண்டியா மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200* ரன்கள் அடித்தார்.
அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதமடித்த வீரராக சச்சின் உலக சாதனை படைத்ததை 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் மறக்க முடியாது. இருப்பினும் அதன் பின் அந்த மைதானம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டமைக்கப்பட்டது. தற்போது வேலைகள் முடிவடைந்துள்ளதால் 14 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியா விளையாடும் போட்டியை நடத்தும் அதிர்ஷ்ட வாய்ப்பு குவாலியர் மைதானத்திற்கு கிடைத்துள்ளது.
அதே போல வரும் 2025 ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி சென்னையிலும் இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் குடியரசு தினத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளதால் அந்த தேதியை மாற்றுமாறு கொல்கத்தா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்தை வீழ்த்த இதை விட நல்ல சான்ஸ் கிடைக்குமா? இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்
அதை ஏற்றுள்ள பிசிசிஐ தற்போது ஜனவரி 22ஆம் தேதி முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி வரும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மற்றபடி ஏற்கனவே அறிவித்த அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



