ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்யாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. அந்த வகையில் பும்ரா தலைமையில் அபாரமாக வென்ற இந்தியா ரோகித் தலைமையில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அந்த தோல்விக்கு பந்து வீச்சில் 3வது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. ஏனெனில் பும்ரா ஒரு பக்கம் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார். மறுபக்கம் சிராஜ் கொஞ்சம் ரன்களை கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தார்.
ஷமி கம்பேக்:
அதனால் 3வது போட்டியில் வெற்றி பெறுவதற்கு முகமது ஷமி இந்திய அணிக்காக விளையாடுவது அவசியமாகிறது. 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ஃபார்முக்கு திரும்பினார். அத்துடன் சயீத் முஷ்டாக் அலி கோப்பையிலும் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 42 ஓவர்கள் வீசினார்.
அதன் காரணமாக மூன்றாவது போட்டியில் ஷமி விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 100% குணமடையாத காரணத்தால் அவர் நான்காவது போட்டியில் தான் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா 2வது போட்டியின் முடிவில் கூறியிருந்தார். இந்நிலையில் முகமது ஷமி 4வது போட்டியில் தான் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்றால் அதற்கு பேசாமல் அவர் ஆஸ்திரேலியாவுக்கு வராமலேயே இருந்து கொள்ளலாம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி காட்டமாக பேசியுள்ளார்.
தாமதமா வேணாம்:
அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “4வது போட்டியில் தான் ஷமி விளையாடுவார் என்ற செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அவர் நான்காவது போட்டியில் விளையாடினால் இந்தியாவுக்கு எந்த பயனும் கிடைக்காது. பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் விளையாட அவரை அனுப்புங்கள். ஒருவேளை 4வது போட்டிக்கு அவரை அழைத்தால் அதற்கு பேசாமல் அழைக்காமலேயே இருங்கள்”
இதையும் படிங்க: விராட் கோலியை பாத்து மற்ற வீரர்களும் அதை செய்ய கத்துக்கனும்.. கவாஸ்கர் அறிவுரை – விவரம் இதோ
“ஏனெனில் இந்தியாவுக்கு ஷமி தற்போது தேவைப்படுகிறார். இந்திய பந்து வீச்சிக்கு அவர் தேவைப்படுகிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்த 3 போட்டிகளிலும் இந்தியா வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை வெற்றி கை மீறிய பின் 4வது போட்டியில் வந்து ஷமி விளையாடினால் அது இந்தியாவுக்கு எந்த பயனையும் கொடுக்காது என்றே சொல்லலாம்.



