பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்க உள்ளது. அதில் வங்கதேசத்தை தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.
ஏனெனில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் பாகிஸ்தான் 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் தோற்றது. அது போக சமீபத்திய வருடங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அந்த அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இத்தொடரில் விளையாட உள்ளது.
மழை காப்பாற்றணும்:
இந்நிலையில் இத்தொடரில் வங்கதேசத்தை மழை வந்து காப்பாற்றினால் தான் உண்டு என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். ஏனெனில் வங்கதேசத்தை தங்களுடைய அணி சொந்த மண்ணில் எளிதாக தோற்கடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ஜேசன் கில்லஸ்பி ஆஸ்திரேலிய அணுகுமுறையை பாகிஸ்தான் அணிக்குள் கொண்டு வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ஆஸ்திரேலியர்களின் மனநிலை பாகிஸ்தான் வீரர்களுக்கு பொருந்தாது என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மழை மட்டுமே வங்கதேசத்தை காப்பாற்ற முடியும். இல்லையேல் எந்த ஒப்பிடும் இல்லாமல் சொந்த மண்ணில் வங்கதேச அணியை பாகிஸ்தான் தோற்கடிக்க அதிக சாதகம் உள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தை அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோற்கடித்துள்ளது”
“ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லஸ்ப்பியை பாகிஸ்தான் பயிற்சியாளராக நியமித்துள்ளது. அதனால் நாம் ஆஸ்திரேலிய மனநிலையுடன் விளையாடுவோமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே சமயம் கில்லஸ்பி பாகிஸ்தான் அணிக்குள் ஆஸ்திரேலிய மனநிலையை புகுத்த முயற்சிக்கலாம். ஆனால் அது மிகப்பெரிய தவறாகும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: விராட் கோலியின் ஃபைனல் 76 இல்ல.. அவர் தான் 2024 டி20 உ.கோ சிறந்த இன்னிங்ஸ் ஆடுனாரு.. மைக் ஹெசன்
முன்னதாக பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்று 2024 டி20 உலகக் கோப்பை தோல்விக்குப்பின் வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியிருந்தார். அதனால் பாகிஸ்தான் போன்ற அணியை தாம் பார்த்ததில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அந்த சூழ்நிலையில் ஜேசன் கில்லஸ்பி முதல் முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.