ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் தங்களது 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அந்த வெற்றிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் 273 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிராக 82 ரன்கள் அடித்த சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அத்துடன் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ள அவர் நிக்கோலஸ் பூரானிடம் இருக்கும் ஆரஞ்சு தொப்பியை தன் வசமாக்கும் முனைப்புடன் விளையாடி வருகிறார். டிஎன்பிஎல் மற்றும் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2023 இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை விளாசிய சுதர்சன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டை பெற்றார்.
பசித் அலி பாராட்டு:
அதன் காரணமாக 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் தொடரில் சாய் சுதர்சன் இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வாய்ப்பில் அரை சதத்தை அடித்து அசத்திய சுதர்சன் தற்போது மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்புக்காக போராடி வருகிறார். இந்நிலையில் சாய் சுதர்சன் டாப் கிளாஸ் பிளேயர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார்.
மேலும் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியன் பராக் போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி விரைவில் சாய் சுதர்சன் இந்திய அணியில் நிரந்தரமாக விளையாடுவார் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “பஞ்சாப்புக்கு எதிராக சாய் சுதர்சன் டாப் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடினார். அந்த ஆட்டத்திற்குப் பின் பேட்டி கொடுக்கும் போது அவருடைய கண்களில் நான் ஸ்பார்க்கை பார்த்தேன்”
இந்திய வாய்ப்பு:
“ஜோப்ரா ஆர்ச்சரை எதிர்கொள்வதைப் பற்றி பேசிய அவர் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறார். ஃபுல், கட் ஷாட்டுகளை விளையாடும் சுதர்சன் நல்ல பிளேயர் என்று டபுள்யூவி ராமன் சரியாகச் சொன்னார். நீண்ட காலமாக அசத்துவதற்காக தயாராகும் சுதர்சனை பார்த்து ஜெய்ஸ்வால், ரிங்கு, பராக் ஆகியோர் கவனமாக இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: இது சோகமா இருந்தாலும்.. தோனி மேஜிக் செஞ்சு அந்த மகத்தான கதையை எழுதுவாரு.. ராயுடு பேட்டி
“அது சுதர்சன் அல்லது பிரியான்ஸ் ஆர்யாவாக இருக்கட்டும். அவர்கள் கொஞ்சம் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அது கிடைத்ததும் அவர்கள் இந்திய அணிக்குள் வந்து விடுவார்கள் என்ற என்னுடைய வார்த்துக்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 28 வயதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுதர்சன் 23 வயது என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். பெரிய வீரராக வருவதற்கான தன்னை அவரது முகம் மற்றும் கண்ணில் எழுதப்பட்டுள்ளது. அவரைப் போன்ற வீரர்களை பார்த்து அவர்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதற்காகவே ரோஹித், கோலி டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளனர்” என்று கூறினார்.



