
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறுவதால் அதை வெற்றிகரமாக நடத்த அந்நாட்டு வாரியம் தயாராகி வருகிறது. இருப்பினும் அத்தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று நாங்கள் விளையாட மாட்டோம் என்று இந்தியா ஆரம்பத்திலேயே அடம் பிடிக்க துவங்கியுள்ளது.
ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா முற்றிலும் நிறுத்தியுள்ளது. அத்துடன் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது. குறிப்பாக 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்ற விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.
கவலையுடன் பசித் அலி:
அதே போல தங்களது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்துமாறு ஐசிசியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெஷாவரில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சினைகளை பாகிஸ்தான் அரசு சரி செய்யவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்ததாக நடைபெறும் வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பசித் அலி பேசியது பின்வருமாறு.
“சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் வங்கதேச தொடருக்குப்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. எனவே நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும். கடவுளே, இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் ட்ராபி கண்டிப்பாக இங்கு நடக்காது. ஆனால் பலூசிஸ்தானிலும் பெசாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர்”
இதையும் படிங்க: இந்திய அணியில் கம்பேக் கொடுக்க திட்டம்.. கேப்டனாக உயர்வு பெற்ற இஷான் கிசான்.. விவரம் இதோ
“அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும். அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்களை கூட சாம்பியன்ஸ் ட்ராபி நடக்காது. நமது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும். அதை நம் வாரியத் தலைவர் அறிவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.