பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதனுடைய முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் அடித்ததால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தார் ரோட் போல இருந்த முல்தான் மைதானத்தில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 823-6 ரன்கள் குவித்தது.
பின்னர் பாகிஸ்தானை 220 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. மறுபுறம் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்தும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான சாதனை படைத்தது. இது போக சமீபத்தில் வங்கதேசத்திடம் முதல் முறையாக பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.
புதிய ஆஸ்திரேலிய க்யூரேட்டர்:
சமீப காலங்களில் பாகிஸ்தானில் உள்ள பிட்ச்கள் ஃபிளாட்டாக இருப்பதே இந்தத் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாகிறது. அதை சரி செய்வதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து டானி ஹெம்மிங் எனும் ஸ்பெஷல் மைதான பராமரிப்பாளரை பாகிஸ்தான் வாரியம் சமீபத்தில் தங்கள் மைதானங்களின் தலைமை க்யூரேட்டராக நியமித்தது. ஆனால் அவருடைய தலைமையிலும் பிட்ச் எந்த மாற்றமும் காணவில்லை என்பதை பாகிஸ்தான் – இங்கிலாந்து முதல் போட்டி நிரூபித்தது.
இந்நிலையில் பிட்ச்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை அருகில் உள்ள இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் டெஸ்ட் போட்டியில் பந்து இரண்டாவது நாளில் சுழலத் துவங்கும் என்று நாம் நினைத்தோம். ஆனால் 5வது நாளில் கூட அங்கே பந்து சுழலவில்லை”
இந்தியாவை பாருங்க:
“அதற்காக ஐசிசி துபாய் மைதானங்களில் பராமரிப்பாளராக செயல்பட்ட மைதான பராமரிப்பாளரை ஆஸ்திரேலியாவில் இருந்து நாம் கொண்டு வந்தோம். ஆனால் அவருக்கும் இங்கே பிட்ச் எப்படி தயாரிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. தற்போது அதே பிட்ச்சில் பந்து சுழலும் என்ற நம்பிக்கையுடன் இரண்டாவது போட்டியும் நடைபெறுகிறது”
இதையும் படிங்க: அவங்க 2 பேரை எதிர்த்து இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடுவது உண்மையிலேயே கஷ்டம் தான் – ரச்சின் ரவீந்திரா அச்சம்
“அதனால் பிட்ச் எப்படி உருவாக்க வேண்டும் என்று தெரியாத ஒரு பராமரிப்பாளரை நியமித்து என்ன பயன்? இது முக்கியமான கேள்வி. ஏனெனில் மொத்த உலகமும் நம்மை பார்த்து சிரிக்கிறது. இந்தியாவை பாருங்கள். அவர்கள் எப்படி தாங்கள் விரும்பும் பிட்ச்களை உருவாக்குகிறார்கள் என்பதையும் பாருங்கள்” என்று கூறினார். இதையடுத்து அதே முல்தான் மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி பாகிஸ்தான் – இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் துவங்கியுள்ளது.



