WTC Final : ஆஸி பவுலர்கள் பந்தை சேதப்படுத்தி இந்திய பேட்டிங்கை காலி பண்ணிட்டாங்க, முன்னாள் பாக் வீரர் ஆதாரத்துடன் குற்றசாட்டு

Umpires Ball
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு 469 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 15, கில் 13, புஜாரா 14, விராட் கோலி 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 ரன்களில் அவுட்டானார். அதன் காரணமாக 2வது நாள் முடிவில் 151/5 என தடுமாறுவதால் ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கே இன்னும் 119 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இந்தியாவுக்கு களத்தில் ரகானே 29*, பரத் 5* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் யாருக்கும் தெரியாமல் பந்தை சேதப்படுத்தி இந்திய டாப் ஆர்டரை காலி செய்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி பரபரப்பாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

ஆதாரத்துடன் விமர்சனம்:
குறிப்பாக புஜாரா, விராட் கோலி ஆகியோர் அவுட்டான 16, 17, 18 ஆகிய ஓவர்களில் பந்தின் பளபளப்பு மாறியதை யாருமே கவனிக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “முதலில் இப்போட்டியை நேரடியாக பார்க்கும் வர்னணையாளர்கள் மற்றும் நடுவர்கள் ஆகியோரை நான் கைதட்டி பாராட்டுகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலியா பந்தில் தெளிவாக விளையாடியுள்ளனர். ஆனால் யாரும் அதைப்பற்றி பேசவில்லை. மேலும் எந்த பேட்ஸ்மேன்களும் என்ன நடக்கிறது? என்று ஆச்சரியப்படவில்லை”

“இதற்கு வெளியே செல்லும் என்று நினைத்து அடிக்காமல் விட்ட பந்துகளில் பேட்ஸ்மேன்கள் கிளீன் போல்ட்டானதை எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதற்கான ஆதாரத்தையும் நான் கொடுக்கிறேன். அதாவது ஷமி பந்து வீசும் போது 54வது ஓவர் வரை பந்தின் பளபளக்கும் பக்கம் வெளிப்புறத்தில் இருந்ததால் பந்து ஸ்டீவ் ஸ்மித் நோக்கி உள்ளே சென்றது. ஆனால் அது ரிவர்ஸ் ஸ்விங் கிடையாது. ரிவர்ஸ் ஸ்விங் என்றால் பளபளக்கும் பக்கம் உள்ளே இருக்கும் போது பந்து உள்நோக்கி வருவதாகும்”

- Advertisement -

“மற்றொரு எடுத்துக்காட்டாக 16, 17, 18 ஆகிய ஓவர்களில் விராட் கோலி அவுட்டான பந்தின் பளபளப்பு பக்கத்தை பாருங்கள். மிட்சேல் ஸ்டார்க் பந்தை கையில் வைத்திருந்த போது பளபளக்கும் பக்கம் வெளியே இருந்தது. ஆனால் பந்து பிட்ச்சான பின் வேறு பக்கம் திரும்பியது. அதே போல ஜடேஜா பந்தை ஆன் சைட் திசையில் அடித்தும் அது ஓவர் தி பாய்ண்ட் திசையில் சென்றது. அதைப் பார்த்தும் எதுவுமே சொல்லாத நடுவர்கள் குருடர்களா? எனவே இந்த எளிமையான விஷயங்களை மைதானத்தில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியாமல் போனது ஏன் என்பது கடவுளுக்கு தான் தெரியும்”

“அது மட்டுமின்றி கேமரூன் கிரீன் பந்தின் பளபளக்கும் பக்கத்தை புஜாராவை நோக்கி வீசினார். ஆனால் அந்த பந்து உள்ளே வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரிய பணக்கார வாரியமாக இருக்கும் பிசிசிஐ இதை பார்க்கவில்லையா? அப்படியானால் நீங்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றதையே மகிழ்ச்சியாக பார்க்கின்றனர்”

- Advertisement -

“பொதுவாக 15 – 20 ஓவர்களிலேயே பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகுமா? அதுவும் இப்போட்டியில் பயன்படுத்தப்படும் டுக் பந்துகள் ஆகுமா? குக்கும்பரா பந்தில் அவ்வாறு ஆனால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்த ஃபைனலில் பயன்படுத்தப்படும் பிரத்தியேக டுக் பந்துகள் 40 ஓவர்கள் வரை தாங்கக் கூடியது” என்று கூறினார்.

அது போக இந்தியா பேட்டிங் செய்த இன்னிங்ஸில் சராசரி பவுன்ஸ் விகிதம் 1.11 மீட்டராக இருந்த நிலையில் விராட் கோலியை ஸ்டார்க் அவுட்டாக்கிய பந்து திடீரென 1.54 மீட்டராக இருந்தது என பிரபல அலசல் நிறுவனமும் ட்விட்டரில் கூறியுள்ளது.

இதையும் படிங்க:WTC Final : கோப்பையை விடுங்க, டாஸ் தவிர ஒரு செஷனை கூட ஜெயிக்கல – தோல்வி கன்ஃபார்ம், முன்னாள் இந்திய வீரர் வேதனை

இந்த நிலையில் ஏற்கனவே 2018இல் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலியா சிக்கியதை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக அப்போட்டியில் நடுவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தும் ஆஸ்திரேலியர்கள் கேமராவில் சிக்கினர். அதே போல இப்போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் வேலையை நடுவர்கள், கேமராமேன் தவற விட்டிருக்கலாம் என ரசிகர்களும் சந்தேகிக்கின்றனர்.

Advertisement