ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் செமி ஃபைனல் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போட்டி இந்திய நேரப்படி 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா நகரில் இருக்கும் ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அப்போட்டியில் வென்று ஃபைனலுக்கு செல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இத்தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. மறுபுறம் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இம்முறையும் ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு சவாலை கொடுக்க உள்ளது.
கயானா மைதானம்:
இந்நிலையில் இப்போட்டி நடைபெறும் கயானா மைதானம் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கே பொருத்தமாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ராபின் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன் அடில் ரசித் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய 2 பவுலர்களை திறம்பட எதிர்கொண்டால் எளிதாக இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த மைதானத்தில் இந்தியாவின் கை மேலோங்கி இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மைதானத்தில் இங்கிலாந்தை விட இந்தியாவின் பவுலிங் சேர்க்கை பொருத்தமாக இருக்கும். இங்கிலாந்து அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரசித் ஆகியோர் முக்கியமானவர்களாக இருப்பார்கள். எனவே அந்த 2 வீரர்களை இந்தியா கவுன்டர் செய்தால் இந்த இங்கிலாந்து பவுலிங் அட்டாக்கை நம்மால் உடைக்க முடியும்”
“இந்திய அணியின் பார்வையில் அவர்கள் அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக கருதுகிறேன். குறிப்பாக மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் அற்புதமாக செயல்படுகிறார். அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்களும் நிதானமாக செயல்படுகின்றனர். அதே போல எந்த நேரத்திலும் துல்லியமாக பந்து வீசக்கூடிய பும்ரா உங்களிடம் இருக்கிறார். எனவே அது மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்தியாவின் மற்றொரு சாவியாக இருக்கும்”
இதையும் படிங்க: அவர் ஒருத்தர் போதும்.. அதை மாற்றியுள்ள இந்தியா இம்முறை இங்கிலாந்திடம் தோற்க மாட்டாங்க.. பால் காலிங்வுட்
“இருப்பினும் ஒரு பவுலர் மட்டுமின்றி வெற்றிக்கு அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவது அவசியம். இந்தத் தொடரில் ஏற்கனவே பும்ரா பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளார். 2022 போட்டியில் இருந்ததை விட இங்குள்ள சூழ்நிலைகள் வித்தியாசமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் இங்கிலாந்தை விட இங்குள்ள சூழ்நிலைகள் இந்தியாவுக்கே அதிகமாக சூட்டாகும்” என்று கூறினார்.



