2023 உ.கோ குவாலிபயர் : ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் 35 வருட சாதனையை உடைத்த நெதர்லாந்து வீரர் – அபார உலக சாதனை

Bas Dee Leede
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் விளையாடப் போகும் கடைசி 2 அணிகளை தீர்மானிக்கும் குவாலிபயர் தொடர் ஜிம்பாப்வே நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தொடர் வெற்றிகளை பெற்ற 1996 சாம்பியன் இலங்கை ஃபைனலுக்கு முன்னேறி 9வது அணியாக தகுதி பெற்ற சாதனை படைத்தது. ஆனால் மறுபுறம் 1975, 1979 சாம்பியன் பட்டங்களை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக உலக கோப்பையிலிருந்து வெளியேறிய நிலையில் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜிம்பாப்பேவும் கடைசி நேரத்தில் ஸ்காட்லாந்திடம் தோற்று வெளியேறியது.

அந்த நிலைமையில் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 6 போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் 2வது இடத்திலிருந்த ஸ்காட்லாந்து மோசமாக தோற்காமல் இருந்தாலே 90% ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றிருந்த நிலையில் 4வது இடத்திலிருந்த நெதர்லாந்துக்கு வெறும் 10% மட்டுமே வாய்ப்பு இருந்தது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து போராடி 50 ஓவர்களில் 277/9 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

புதிய உலக சாதனை:
அதிகபட்சமாக ப்ரெண்டன் மெக்முலன் சதமடித்து 106 (110) ரன்களும் கேப்டன் பேரிங்டன் 64 (84) ரன்களும் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 278 ரன்கள் துரத்திய நெதர்லாந்துக்கு விக்ரம்ஜித் அய்ங்க 40, மேக்ஸ் ஓ’தாவுத் 20, பரேசி 11 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு நல்ல ரன்களை எடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் அட்டகாசமாக செயல்பட்ட பஸ் டீ லீடி அதிரடியாக விளையாடி விளையாடி அரை சதமடித்தார்.

குறிப்பாக 44 ஓவர்களில் இலக்கை எட்டினால் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற கணக்கை தெரிந்து கொண்டு அவர் அரை சதமடித்த பின் 41, 42வது ஓவரில் 1, 6, 6, 1, 2, 6, 1, 6, 2, 2, 6, 2 என இருமடங்கு அதிரடியாக விளையாடி அடுத்த 24 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அந்த வகையில் அட்டகாசமான சதமடித்து மிரட்டிய அவர் மொத்தமாக 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 123 (92) ரன்களை விளாசி வெற்றி உறுதி செய்து அவுட்டானார். அவருடன் கேப்டன் எட்வார்ட்ஸ் 25 ரன்களும் ஜுல்பிக்கர் 33* ரன்களும் எடுத்ததால் 42.5 ஓவரிலேயே 278/6 ரன்கள் எடுத்த நெதர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அதனால் அதிகபட்சமாக லீஸ்க் 2 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் ஸ்காட்லாந்தால் வெற்றி பெற முடியவில்லை. அதை விட 7 ஓவர்கள் மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடித்ததால் ரன் ரேட் அடிப்படையில் ஸ்காட்லாந்தை பின்னுக்கு தள்ளிய நெதர்லாந்து புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி 2023 உலகக் கோப்பைக்கு 10வது அணியாக தகுதி பெற்றது.

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி பந்து வீச்சில் 10 ஓவர்களில் 52 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து பேட்டிங்கில் அதிரடியாக 123 (92) ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய பஸ் டீ லீடி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதை விட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை எடுத்த அதே போட்டியில் சதமடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் 35 வருட சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. பஸ் டீ லீடி : 123, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2023*
2. விவ் ரிச்சர்ட்ஸ் : 119, நியூசிலாந்துக்கு எதிராக, 1987
3. பால் காலிங்வுட் : 112*, வங்கதேசத்துக்கு எதிராக, 2005

இதையும் படிங்க:தற்போதைய கோச்சர்களுக்கு எல்லாம் கேப்டனாக இருந்துள்ள ஒரே கேப்டன் தல தோனி – வியக்க வைக்கும் தகவல் இதோ

அது மட்டுமல்லாமல் உலகக்கோப்பை குவாலிபயர் தொடர் வரலாற்றில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இவருடைய தந்தை டிம் டீ லீடி 1996, 2003, 2007 உலகக் கோப்பைகளில் விளையாடி சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை எடுத்த பெருமைக்குரியவர். அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் அவருடைய மகன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement