ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டாக்கா நகரில் நடைபெற்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேச அணி :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டதால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்திருந்தது. பின்னர் மழை காரணமாக டக் வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 41 ஓவர்களில் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 35 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதாவது இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருமுறை கூட ஒருநாள் தொடரை கைப்பற்றாத வங்கதேச அணி இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள வங்கதேச அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை வாஷ் அவுட் செய்யுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க : 349 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த இந்தியா ஏ அணி.. மழையால் ஏற்பட்ட முடிவு – விவரம் இதோ
சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் வங்கதேச அணி இதுவரை தொடர்ச்சியாக 5 ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணியின் இரண்டாம் தர வீரர்களே இந்த சுற்றுப்பயணத்திற்கு வந்திருந்தாலும் வங்கதேச அணியின் இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.



