நட்பு தான் முக்கியம்.. வங்கதேச – நியூஸிலாந்து வீரர்களை கட்டிப்பிடிக்க வைத்த மன்கட் அவுட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

Mankad Ish Sodhi
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் எங் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலனும் 12 (15) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதே போல அடுத்ததாக வந்த கிறிஸ் பௌஸ் 14 ரன்னில் பெவிலியன் திரும்பியதால் 36/3 என ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தடுமாற்றமான துவக்கத்தை பெற்றது. இருப்பினும் அந்த சூழ்நிலையில் டாம் ப்ளண்டலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் 49 (61) ரன்கள் குவித்து சரிவை சரி செய்தார்.

- Advertisement -

கட்டிப்பிடிக்க வைத்த மன்கட்:
அவருடன் மறுபுறம் சிறப்பாக விளையாடி நியூசிலாந்தை வலுப்படுத்திய டாம் பிளண்டல் 68 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா 10, மெக்கொன்சி 20, ஜெமிசன் 20 என போன்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 219/8 என நியூசிலாந்து தடுமாறிய போது கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ரன்களை எடுக்கும் நோக்கத்தில் பேட்டிங் செய்த இஷ் சோதி 46வது ஓவரில் பவுலர் ஹசன் மஹ்முத் பந்தை வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார்.

அதை சரியாக கவனித்த பவுலர் மஹ்முத் உடனடியாக பந்து வீசுவதை நிறுத்தி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதனால் வங்கதேச அணியினர் அவுட் கேட்டதை தொடர்ந்து பெரிய திரையில் நடுவர்கள் சோதித்தனர். அப்போது பந்தை வீசுவதற்கு முன்பாகவே இஷ் சோதி வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதால் அவுட் என்று 3வது நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

- Advertisement -

அதனால் இஷ் சோதி ஏமாற்றுத்துடன் பெவிலியனை நோக்கி நடக்கத் துவங்கிய போது வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் பவுலர் மஹ்முத் ஆகியோர் நட்பு, நேர்மை தான் முக்கியமென தங்களுடைய முடிவை வாபஸ் பெறுவதாக சொன்னதுடன் அவரைத் தொடர்ந்து பேட்டிங் செய்யுமாறு அழைத்தனர். அதனால் நெகிழ்ந்து போன இஷ் சோதி பவுலர் ஹசன் மஹ்முத்தை கட்டிப்பிடித்து வெளிப்படுத்தியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

ஏனெனில் உலகம் முழுவதிலும் பலமுறை இது போல மன்கட் செய்யப்படும் போதெல்லாம் இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் காரசாரமாக மோதிக்கொள்வதே வழக்கமாகும். இருப்பினும் அதற்கு விதிவிலக்கான தங்கள் முடிவை வாபஸ் பெற்ற வங்கதேசம் அணியினரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இறுதியில் இஷ் சோதி 35 ரன்கள் எடுத்த உதவியுடன் நியூஸிலாந்து 49.2 ஓவரில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகிதி ஹசன், கலீட் அஹமத் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement