ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று வங்கதேச கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் சில இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. அந்த தாக்குதலில் சில மக்கள் இயற்கை எய்தியதாகவும் செய்திகள் வெளி வந்ததால் இந்தியாவிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
அதனுடைய ஒரு பகுதியாக வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்று இங்குள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு கொல்கத்தாவுக்கு பிசிசிஐ அறிவுரைக் கொடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட கொல்கத்தா 9.20 கோடிக்கு வாங்கிய ரஹ்மானை தங்களுடைய அணியிலிருந்து விடுவித்தது.
ஐசிசி கொடுத்த பதில்:
அதற்கு பதிலடியாகவே வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்கும் 2026 டி20 உலகக் கோப்பையில் தங்களது போட்டிகளை இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்புவதற்கும் வங்கதேசம் தடை விதித்துள்ளது. அது மட்டுமின்றி தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஐசிசிக்கு வங்கதேசம் கோரிக்கை வைத்தது.
அதை செவ்வாய்க்கிழமை ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி நிர்வாகக்குழு விவாதித்தது. அதில் திடீரென வங்கதேச போட்டிகளை இலங்கைக்கும் மாற்றுவதில் சிக்கல் இருப்பதாக ஐசிசி கருதியது. எனவே ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது விளையாடாமல் எதிரணியிடம் புள்ளிகளை இழக்க தயாராகுங்கள் என்று ஐசிசி வங்கதேசத்திற்கு பதில் கொடுத்துள்ளது.
வங்கதேசம் சாடல்:
இந்நிலையில் தங்களது கோரிக்கையை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத ஐசிசியை வங்கதேச வாரியம் சாடியுள்ளது. அத்துடன் எந்த காரணத்திற்காகவும் இந்தியாவுக்கு வர முடியாது என்று அடம் பிடிக்கும் வங்கதேச அரசின் ஆலோசகர் ஆசிப் நஸ்ருள் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் கிரிக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடக்கூடிய நாடு என்பதால் நிச்சயம் உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறோம்”
இதையும் படிங்க: 233 ரன்ஸ்.. தெ.ஆ மண்ணில் மிரட்டிய இளம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி.. உ.கோ தட்டி தூக்க தயார்
“அதற்காக தேசிய அவமானத்தையோ, நமது வீரர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையோ அல்லது நாட்டின் கண்ணியத்தையோ பணையம் வைத்து விளையாட விரும்பவில்லை. ஆனால் இன்று ஐசிசியிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த கடிதத்தை பார்த்த பின் வங்கதேச வீரர்களுக்கு இந்தியாவில் உருவாகியுள்ள கடுமையான பாதுகாப்பு நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது” எனக் கூறினார்.



