இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கியது. அந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் தொடர்ச்சியாக சவால் விடுத்தனர். குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 என்ற கணக்கில் முதல் முறையாக தோற்கடித்து வங்கதேசம் புதிய சாதனை படைத்தது.
எனவே அந்த வெற்றியால் கிடைத்த உத்வேகத்துடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ கூறினார். இந்நிலையில் வங்கதேசத்தை இனிமேலும் பலவீனமானவர்கள் அல்லது கத்துக்குட்டி என்று நம்மால் சொல்ல முடியாது என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். குறிப்பாக 2022ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாடியது.
கத்துக்குட்டி கிடையாது:
அந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து வங்கதேசம் அசத்தியது. அதே போல தாக்காவில் நடைபெற்ற 2வது போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்திய இந்தியாவை 74-7 என வங்கதேசம் மடக்கிப் பிடித்தது. அப்போது அஸ்வின் 42*, ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்கள் அடித்ததால் வங்கதேசத்திடம் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்க வேண்டிய அவமானத் தோல்வியிலிருந்து இந்தியா தப்பித்தது.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தானை தோற்கடித்துள்ள வங்கதேசத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிரான அவர்களுடைய வெற்றி ஆச்சரிய அலைகளை உண்டாக்கியது. பொதுவாக நான் கத்துக்குட்டி அணிகள் வெளியே வந்து நன்றாக செயல்படுவதை பார்க்க விரும்பக்கூடிய ஒருவன்”
அஸ்வின் பாராட்டு:
“அவர்களை இனிமேலும் நீங்கள் கத்துக்குட்டிகள் என்று அழைக்க முடியாது. அவர்கள் சில அற்புதமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். அவர்கள் தங்களுடைய கைகளை உயர்த்தி நாங்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம் என்பதை மற்றவர்களுக்கு காண்பித்துள்ளனர். கடந்த முறை வங்கதேசத்திற்கு சென்ற போது அவர்கள் எங்களுக்கு சவாலை கொடுத்தனர்”
இதையும் படிங்க: 15 வருடம் 46 நாடுகள்.. இந்தியா மட்டுமே ஒரு அணியாக சாதனை.. ஆப்கானிஸ்தானுக்காக நபி உலக சாதனை
“எனவே அவர்களுக்கு எதிரான இந்த தொடரை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல சென்னையில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை வங்கதேசம் விரைவாக அவுட் செய்தது. அதனால் 34-3 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்தியா அதிலிருந்து மீண்டு வர போராடி வருவது குறிப்பிடத்தக்கது.



