வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியிலும் வங்கதேசத்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்துள்ளது. குவாலியரில் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 19.5 ஓவரில் 127 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக கேப்டன் சான்டோ 27, மெஹதி ஹசன் 35* ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 128 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் 29, சஞ்சு சாம்சன் 29, ஹர்திக் பாண்டியா 39* ரன்கள் எடுத்தனர். அதனால் 11.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா எளிதாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
வேலையாகாத திட்டங்கள்:
முன்னதாக பாகிஸ்தானை சமீபத்தில் தோற்கடித்தது போல இந்தியாவையும் டெஸ்ட் தொடரில் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ கூறினார். ஆனால் கடைசியில் வங்கதேசம் படுதோல்வியை சந்தித்த நிலையில் டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் இப்போட்டியில் முதல் 6 ஓவரில் நன்றாக பேட்டிங் செய்யாதது தோல்விக்கு முக்கிய காரணமானதாக அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் இப்போட்டியில் தவறவிட்ட திட்டத்தை பயன்படுத்தி அடுத்த 2 போட்டிகளில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் சாண்டோ இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் நன்றாக துவங்கவில்லை. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் முதல் 6 ஓவர்கள் முக்கியம். ஆனால் நாங்கள் நன்றாக துவங்கவில்லை”
திட்டத்துடன் வருவோம்:
“நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடி முதல் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய திட்டம். ஆனால் சில ஓவர்கள் நாங்கள் மெதுவாக விளையாட வேண்டி இருந்தது. அடுத்த இரண்டு போட்டிகளுக்கு இன்னும் சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும். ஒருவேளை இப்போட்டியில் விக்கெட்டுகள் கைவசம் இருந்திருந்தால் இன்னும் 10 – 15 ரன்கள் அடித்திருப்போம்”
இதையும் படிங்க: மறுபடியும் பிறந்த மாதிரி இருக்கு.. அஸ்வினுடன் இதை செஞ்சது கம்பேக் கொடுக்க உதவுச்சு.. வருண் சக்கரவர்த்தி பேட்டி
“பந்து வீச்சில் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை. இது போன்ற பிட்ச் பவுலர்களுக்கு மிகவும் கடினமானது. நாங்கள் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். முஸ்தபிசூர், ரிஷாத் ஆகியோர் நன்றாக பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அந்த வகையில் சவால் விடுத்த வங்கதேசத்தை மீண்டும் டி20 தொடரிலும் இந்தியா அடித்து நொறுக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



