வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அக்டோபர் ஆறாம் தேதி குஜராத் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்தை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 19.5 ஓவரில் 127 ரன்களுக்கு சுருட்டியது.
வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 35*, கேப்டன் சாண்டோ 27 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 128 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29, சஞ்சு சாம்சன் 29, ஹர்டிக் பாண்டியா 39* ரன்கள் அடித்து 11.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
3 வருட கம்பேக்:
அதனால் டெஸ்ட் தொடரை போலவே டி20 தொடரிலும் ஆதிக்கத்தை செலுத்தும் இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய பின் டிஎன்பிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து விளையாடியது பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்குள் வந்துள்ளது கண்டிப்பாக எனக்கு உணர்வுபூர்வமானது. நீல நிறத்தில் மீண்டும் விளையாட வந்துள்ளது மறுபிறப்பை போல உணர்கிறேன். எப்போதும் செயல்முறைகளை பின்பற்ற விரும்புகிறேன். அதைத்தான் ஐபிஎல் தொடரில் பின்பற்றினேன்”
அஸ்வினுடன் சேர்ந்து:
“அதிகம் முன்னோக்கி செல்லாமல் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறேன். அதனாலேயே நான் அதிகமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அல்லது சிந்திக்காமல் இருக்கிறேன். ஐபிஎல் முடிந்த பின் டிஎன்பிஎல் போன்ற தரமான தொடரில் விளையாடினேன். அங்கே தான் நான் அஸ்வின் பாயுடன் சேர்ந்து நிறைய வேலைகள் செய்தேன். அவருடன் சேர்ந்து நாங்கள் கோப்பையை வென்றோம்”
இதையும் படிங்க: சவால் விட்ட வங்கதேசத்தை.. 11.5 ஓவரிலேயே நொறுக்கிய இந்தியா.. 2016ஐ மிஞ்சி மிகப்பெரிய சாதனை வெற்றி
“அது இங்கே வருவதற்கு எனக்குப் பெரிய தன்னம்பிக்கையின் கொடுத்தது. முதல் ஓவரிலேயே கேட்ச் விடாமல் இருந்திருந்தால் எனக்கு விக்கெட் கிடைத்திருக்கலாம். இருப்பினும் கிரிக்கெட் அப்படிதான் செல்லும். அதை புகார் சொல்ல முடியாது கடவுளுக்கு நன்றி. இங்கே நிறைய சவால் இருக்கும். இந்திய அணிக்குள் வந்ததுமே உங்களை பலரும் எளிதாக முடிந்து விட்டதாக எழுதுவார்கள். தொடர்ந்து போராடி கதவை தட்ட வேண்டும். இம்முறை அது நடந்தது. அதில் தொடர்ந்து நல்ல வேலை செய்வேன் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



