மாப்ளைகளுக்கு அவ்ளோ வெறி, வென்றும் வங்கதேசத்தை கலாய்க்கும் ரசிகர்கள், காரணம் என்ன

Ban vs ZIM
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற 28வது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தங்களது முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்ததால் இப்போட்டியில் இவ்விரு அணிகளுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவர்களில் போராடி 150/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு ஒருபுறம் நங்கூரமாக நின்று 7 பவுண்டரி 1 சிக்சருடன் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் சாண்டோ 71 (55) ரன்களை குவித்த நிலையில் கேப்டன் சாகிப் அல் ஹசன் 23 (20) உட்பட இதர வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

அதை தொடர்ந்து 151 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு மாதவேர் 4 (3) கேப்டன் கிரைக் எர்வின் 8 (7) சும்பா 8 (15) என முக்கிய வீரர்கள் வங்கதேசத்தின் அதிரடியான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட சிக்கந்தர் ராசா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 35/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மற்றொரு நட்சத்திர வீரர் சீன் வில்லியம்ஸ் அதிரடியாக 8 பவுண்டரியுடன் 64 (42) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடி கடைசி நேரத்தில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

நோ பால் ட்விஸ்ட்:
அதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய மொசாதிக் ஹொசைன் 2வது பந்தில் ப்ராட் எவன்ஸை 2 (2) ரன்களில் அவுட்டாக்கினார். அடுத்த பந்தை எதிர்கொண்டு பைஸ் வாயிலாக பவுண்டரி அடித்த ரிச்சர்ட் ங்கரவா 4வது பந்தில் சிக்சரை பறக்க விட்டு மிரட்டினாலும் 5வது பந்திலேயே ஸ்டம்பிங் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது அதை எதிர்கொண்ட ப்ளஸிங் முசர்பாணியும் ஸ்டம்பிங் ஆனதால் வங்கதேசம் வென்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அணியினர் வழக்கம் போல வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த நேரத்தில் மீண்டும் ஒரு டிவிஸ்ட் போல் அந்த ஸ்டம்பிங்கை சோதித்த நடுவர் பந்து ஸ்டம்பை தாண்டுவதற்கு முன்னரே வங்கதேச விக்கெட் கீப்பர் வெறியுடன் பிடித்து அடித்தது தெரிய வந்தது. அதனால் அந்த பந்தை நோ-பால் என்று  நடுவர் அறிவித்ததால் மீண்டும் உயிர் பெற்ற ஜிம்பாபேவுக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

ஆனால் மீண்டும் அதில் பதறாமல் பந்து வீசிய மொசாதிக் ஹொசைன் ரன் எதுவும் கொடுக்காமல் வங்கதேசத்துக்கு 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் ஏமாற்றமடைந்த ஜிம்பாப்வே கடந்த போட்டியில் பாகிஸ்தானை போராடி 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தும் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம் கடைசி நேரத்தில் வழக்கம் போல வெற்றி பெறுவதற்கு முன்பாகவே கொண்டாடும் வகையில் வெறியுடன் ஸ்டம்பிங் செய்து வெற்றியை தாரை பார்க்க தெரிந்த வங்கதேசத்தை “மாப்பிள்ளைகளுக்கு அவ்வளவு வெறி” என்ற வகையில் ரசிகர்கள் கலாய்கின்றனர்.

இருப்பினும் பரபரப்பில் அசத்தலாக செயல்பட்ட அந்த அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இந்தியாவுக்கு பின் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தஸ்கின் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இப்போட்டியில் வங்கதேசம் வென்றதால் ஏற்கனவே ஜிம்பாப்வேவிடம் 1 ரன்னில் தோற்ற பாகிஸ்தான் எஞ்சிய போட்டிகளில் வென்றாலும் கூட அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மேலும் குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு எதிரணியும் பாகிஸ்தானுக்கு தங்களது நாட்டுக்கு செல்ல விமான டிக்கெட்டை உறுதி செய்து வருவதாக ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

Advertisement