ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் பாகிஸ்தான் தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடுகிறது. அங்கே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களது முதல் போட்டியில் அக்டோபர் இரண்டாம் தேதி கொழும்புவில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே ஒமைமா சோஹைல், சிட்ரா ஆமின் ஆகியோர் மருபா அக்தர் வேகத்தில் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டானார்கள். அப்போது நங்கூரமாக விளையாட முயற்சித்த முனிபா அலி 17, ரமீன் ஷமிம் 23 ரன்களில் அவுட்டானார்கள். அடுத்து வந்த அலியா ரியாஸ் 13, சிட்ரா நவாஸ் 15, கேப்டன் ஃபாத்திமா சானா 22 ரன்களில் அவுட்டாகி சென்றனர.
எங்கே போனாலும் அடி:
இறுதியில் டயானா பைக் 16* ரன்கள் எடுத்தும் மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. அதனால் 38.3 ஓவரில் பாகிஸ்தானை வெறும் 129 ரன்களுக்கு வங்கதேசம் சுருட்டி வீசியது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக சொர்ணா அக்தர் 2, மருபா அக்தர் 3, நஹிதா அக்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய வங்கதேசத்துக்கு பர்கானா ஹோக் 2 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சர்மின் அக்தர் 10 ரன்களில் அவுட்டானாலும் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய ரூபியா ஹைதர் அரை சதமடித்து 54* (78) ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் நிகர் சுல்தானா 23, சோபனா 24* ரன்கள் எடுத்தனர்.
ரசிகர்கள் சோகம்:
அதனால் 31.1 ஓவரிலேயே 131/3 ரன்களை அடித்த வங்கதேசம் எளிதாக பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மறுபுறம் பாகிஸ்தான் மகளிரணி போராடாமலேயே படுதோல்வியை சந்தித்தது. ஏற்கனவே பாகிஸ்தான் ஆடவரணி சமீபத்திய ஐசிசி தொடர்களில் அமெரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே போன்ற கத்துகுட்டிகளிடம் அவமானத் தோல்விகளை சந்தித்தது.
அதை விட 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியிடம் 3 முறை தோற்றதால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் மகளிர் உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் தோற்றுள்ள பாகிஸ்தான் எங்கே போனாலும் அடி வாங்குவதால் அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த 9 ஆண்டு ஏக்கம்.. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் சாதித்து காட்டிய – கே.எல் ராகுல்
இதற்கிடையே சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் 2 – 1 (3) என்று கணக்கில் பாகிஸ்தான் மகளிரணி தோற்றது. அப்போட்டியில் ஹரிஷ் ரவூப் போல கேப்டன் பாத்திமா உள்ளிட்ட வீராங்கனைகள் இந்தியாவை கலாய்க்கும் வகையில் சைகை செய்தனர். அதனால் இந்தியாவை கலாய்ப்பதை விட கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினால் பாகிஸ்தான் வெல்லலாம் என்று இந்திய ரசிகர்கள் அறிவுறுத்துகின்றனர்.



