பங்களாதேஷ் அணியின் சீனியர் வீரரான 35 வயதுடைய முகமதுல்லா கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை 50 டெஸ்ட் போட்டிகள், 197 ஒருநாள் போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முகமதுல்லா தற்போது ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார்.
நேற்று ஜூலை 10 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த அவர் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். அவரது இந்த அதிரடியான முடிவு ரசிகர்களை வியக்க வைத்தது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்காக அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்று தெரியவந்துள்ளது. தனது 50-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் 150 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை விளாசி இருக்கும் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பின்வரிசையில் இறங்கிய பவுலர் டஸ்கின் அகமது உடன் சேர்ந்து 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதன் காரணமாக கடைசி நாள் போட்டியின்போது வீரர்கள் மைதானத்திற்குள் நுழையும் போது வரிசையாக நின்று முகமதுல்லாவை கை கொடுத்து வாழ்த்தி உள்ளே அனுப்பினர்.
Before entering the field today, the Bangladesh team gave Mahmudullah a guard of honor. #Bangladesh #Cricket #Mahmudullah #Mahmudullahretire pic.twitter.com/ANID2goMN8
— 𝑺𝒚𝒆𝒅 𝑺𝒂𝒎𝒊 🏏 (@SamiBlitz) July 11, 2021
மேலும் வீரர்களின் மரியாதை அரணுக்கு நடுவில் நடந்து சென்ற முகமதுல்லா ரசிகர்களிடம் இருந்தும் பிரியா விடைபெற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய அவர் : நான் இதே போன்று சிறப்பாக விளையாடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அணிக்காக நான் எனது பங்களிப்பை தந்ததில் மிகவும் பெருமையாக உணர்கிறேன்.
இனிவரும் காலங்களில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காகவே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 50 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 2914 ரன்களை குவித்துள்ளார். இதில் தற்போது கடைசி போட்டியில் விளையாடி அவர் அடித்த 150 ரன்கள் தான் தனிப்பட்ட முறையில் அவர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.