ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பை நழுவ விட்ட இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. முன்னதாக அந்தத் தொடர் முழுவதும் முழுமூச்சுடன் போராடிய பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு போராடினார்.
ஆனால் கடைசி போட்டியின் கடைசி இன்னிங்ஸில் காயத்தை சந்தித்த அவரால் பந்து வீச முடியவில்லை. அதனால் குறைந்தபட்சம் இந்தியா கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டது. ஒருவேளை பும்ரா 5 ஓவர்கள் வீசியிருந்தால் கூட இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். சொல்லப்போனால் பும்ரா காயத்தால் வெளியேறியதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டதாக கவாஜா, ஹெட் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்தியாவுக்காக பவுலிங்:
இந்நிலையில் நாட்டுக்காக காயத்துடன் 5 – 10 ஓவர்கள் வீச முடியாதா என்று ஜஸ்ப்ரித் பும்ரா மீது 1983 உலகக்கோப்பை வென்ற முன்னாள் வீரர் பல்வீந்தர் சந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 1981ஆம் ஆண்டு பும்ராவை போலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற போட்டியில் காயமடைந்த கபில் தேவ் அன்றைய நாள் முழுவதும் விளையாடவில்லை. ஆனால் அடுத்த நாள் பந்து வீசிய கபில் தேவ் இந்தியாவை காயத்துடன் வெற்றி பெற வைத்ததாக அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி சந்து அவர்கள் பேசியது பின்வருமாறு. “பும்ரா விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலர். அதனால் இலக்கு சிறியதாக இருந்தாலும் இந்தியாவை வெற்றி பெற வைக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அவர் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா கடினத்தை சந்தித்திருக்கும். வெற்றி நமது பக்கம் வந்திருக்கலாம்”
கபில் தேவ் சரித்திரம்:
“இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் கபில் தேவ் காயத்துடன் விளையாடியதை எனக்கு நினைவுபடுத்துகிறது. அதற்கு முந்தைய நாளில் கர்சன் கர்வி சூப்பரான பந்தால் கிரேக் சேப்பலை போல்ட் ஆக்கியிருந்தார். அன்றைய நாளில் கபில் காயத்தால் விளையாடவில்லை. ஆனால் அடுத்த நாளில் மிகவும் தைரியத்துடன் வந்து விளையாடிய அவர் ஆஸ்திரேலியாவின் எஞ்சிய விக்கெட்டுகளை எடுத்து எங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்”
இதையும் படிங்க: என் மேல தான் தப்பு.. ஜஸ்ப்ரித் பும்ராவிடம் மோத இதான் காரணம்.. சாம் கோன்ஸ்டஸ் வருத்தம்
“ஆஸ்திரேலியாவுக்கு அப்போட்டியில் 143 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை ஆட்டிப் பார்த்த கபில் தேவ் எங்களுக்காக அற்புதமாக பந்து வீசி வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்படி பும்ரா 1% ஃபிட்டாக இருந்தால் கூட அவர் பந்து வீசியிருக்க வேண்டும். அதே சமயம் அவருடைய முகத்தில் வலி இருந்ததை நான் பார்த்தேன். இல்லையெனில் அவர் பந்து வீசியிருப்பார்” எனக் கூறினார்.



