
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரினை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் முதல் மற்றும் ஐந்தாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட வேளையில் எஞ்சியிருந்த மூன்று ஆட்டங்களில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணியானது கோப்பையை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.
பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே இந்திய அணி வீழ்த்தி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இந்த டி20 தொடர் முடிந்த கையோடு இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை விட வருண் சக்கரவர்த்தி தான் மிகச்சிறந்த டி20 பவுலர் என முன்னாள் இந்திய வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
உலகில் நம்பர் 1 டி20 பவுலராக இருக்கும் வருண் சக்கரவர்த்திக்கு அவரது நம்பர்களே மிகச் சிறந்த உதாரணம். தற்போதைய இந்திய டி20 அணியில் பும்ராவை விட வருண் சக்கரவர்த்தி சிறப்பான பவுலர் என்று கூறுவேன். ஏனெனில் பவர்பிளே ஓவர்களாக இருந்தாலும் சரி, மிடில் ஓவர்களாக இருந்தாலும் சரி, 18-ஆவது ஓவராக இருந்தாலும் சரி ரன் அதிகமாக கசியும் சமயத்தில் வருண் சக்கரவர்த்தி வந்து விக்கெட்டுகளை எடுக்கிறார்.
அவருடைய கரியரின் முதல் பாதியில் காயத்தால் பின்னடைவை சந்தித்த அவர் தற்போது இரண்டாம் பகுதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உலகின் நம்பர் 1 வீரராக மாறி இருக்கிறார். தற்போதைய இந்திய டி20 அணியை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய சொத்தாக திகழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க : இந்தியாவின் அடியால்.. எங்களையே ஆஸிக்குள்ள விடுவாங்களாகன்னு பயந்தோம்.. ஜெமிமாவுக்கு மூனி பதில்
டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் வேளையில் அவரது பங்களிப்பு முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும் வருண் சக்கரவர்த்திக்கு நல்ல நாள் அமைந்தால் நிச்சயம் அந்த நாளில் இந்திய அணியே வெற்றி பெறும் என்றும் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.