ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த இந்தியா வாழ்வா – சாவா போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு சென்றது. அங்கே 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
கடைசியாக தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. இதைத் தொடர்ந்து சில இந்திய வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் துவங்கியுள்ள பிக்பேஷ் தொடரில் விளையாடச் சென்றுள்ளனர். குறிப்பாக நட்சத்திர இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 129* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
ஜெமிமா கலகலப்பு:
அவருடைய அற்புதமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அடித்த 339 ரன்களை இந்தியா திருப்பி அடித்து வெற்றி பெற்றது. அதனால் ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. அந்த வகையில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதற்கு ஜெமிமா முக்கிய காரணமாக இருந்தார்.
அதனால் பிக்பேஷ் தொடரில் விளையாடுவதற்கு தம்மை ஆஸ்திரேலியாவில் அனுமதிப்பார்களா என்று பயந்ததாக ஜெமிமா கலகலப்பாக தெரிவித்தார். இது பற்றி பிரிஸ்பேன் அணிக்காக விளையாடும் அவர் பெர்த் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு. “செமி ஃபைனலுக்கு பின் ஆஸ்திரேலியா என்னை அவர்களுடைய நாட்டு எல்லையைத் தாண்டுவதற்கு அனுமதிப்பார்களா? என்று எனக்கு உறுதியாக தெரியாமல் இருந்தது” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
மூனி டபுள் கலகலப்பு:
அவருடைய கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. அது பற்றி மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீராங்கனை பெத் மூனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு இந்தியாவிடம் தோற்றதால் முதலில் தங்களை ஆஸ்திரேலிய நாட்டுக்குள் விடுவார்களா என்று பயந்ததாக மூனி கலகலப்பான பதிலைக் கொடுத்தார். இது பற்றி அவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டே நேரலையில் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: இதுக்காக தோனி ஜடேஜாவை தியாகம் செய்வாரு.. சிஎஸ்கே ரசிகர்கள் வருந்தும் செய்தி பற்றி ஃகைப் வெளிப்படை
“இந்தியா எங்களை தோற்கடித்ததால், ஆஸ்திரேலியா நாட்டுக்குள் விடுவார்களா என்று கவலைப்பட்டதாக ஜெமிமா சொன்னதை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் உண்மையில் இந்தியாவிடம் தோற்றதால் முதலில் அவர்கள் எங்களை ஆஸ்திரேலியாவுக்குள் விடுவார்களா என்று நான் நினைத்தேன். நல்லவேளையாக நாங்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளதால் அனுமதிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.



