தரமான வீரர்! ஒரே போட்டி ஏகப்பட்ட சாதனைகளை படைத்த பாபர் அசாம் – பாராட்டும் இந்திய ரசிகர்கள்

Babar Azam Pak Vs Aus
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டுக்கு 24 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் 2-வது போட்டி கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று கராச்சி நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

pak vs aus

- Advertisement -

மாஸ் காட்டிய ஆஸ்திரேலியா:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 160 ரன்கள் விளாசினார். அவருடன் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்களும் அலெக்ஸ் கேரி 93 ரன்களும் எடுக்க இதர ஆஸ்திரேலிய வீரர்களும் 20 – 30 என கணிசமான ரன்களை அடித்தனர். இதனால் அந்த அணி 556/9 ரன்கள் எடுத்திருந்த போது தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 148 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

Pak vs Aus

இதனால் பாகிஸ்தானை விட 2-வது இன்னிங்சில் 408 ரன்கள் என்ற மாபெரும் முன்னிலை பெற்று ஆஸ்திரேலியா இந்த இடத்தில் மிகப் பெரிய தவறை செய்து வெற்றியை கோட்டை விட்டது என்றே கூறலாம். ஏனெனில் இவ்வளவு ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் பாகிஸ்தானுக்கு பாலோ – ஆன் கொடுக்காத ஆஸ்திரேலியா மீண்டும் தனது 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவதாக அறிவித்தது.

- Advertisement -

அசத்திய பாக், கோட்டை விட்ட ஆஸி:
அதை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 97/2 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்து பாகிஸ்தான் வெற்றி பெற 506 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் தலா 44 ரன்கள் சாய்த்தனர். இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 1 ரன், அசார் அலி 6 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆனதால் 4-வது நாளில் 21/2 என அந்த அணியின் தோல்வி உறுதியானது.

PAK

பொதுவாக இது போன்ற பெரிய இலக்கை அதுவும் போட்டியின் 5-வது நாளில் துரத்தும் அணிகள் தோல்வியை தவிர்ப்பது மிகவும் அரிதானதாகும். எனவே கடைசி நாளில் வெற்றிக்கு 8 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டதால் ஆஸ்திரேலியா நிச்சயம் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக 5-வது நாளில் விஸ்வரூபம் எடுத்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக களத்தில் நின்று சரிந்த பாகிஸ்தானை தலை நிமிர செய்தார். இவரை அவுட் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறிய நிலையில் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய அசாத் சபிக் 96 ரன்களில் அவுட்டானர்.

- Advertisement -

மறுபுறம் தொடர்ந்து பாறை போல நின்று விளையாடிய பாபர் அசாமுடன் கை கோர்த்த முஹம்மது ரிஸ்வான் தன் பங்கிற்கு ஆஸ்திரேலியாவிற்கு தொல்லை கொடுத்தார். இறுதியில் ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடி வந்த பாபர் அசாம் சதம் அடித்து 21 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 196 ரன்கள் எடுத்தபோது அவுட்டாகி இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய முஹம்மது ரிஸ்வான் சதமடித்து 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 104* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் நங்கூரமான ஆட்டத்தால் 5-வது நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தபோது பாகிஸ்தான் 443/7 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி டிராவில் முடிந்தது.

Babar Azam Pak Vs Aus

பாபர் அசாம் உலகசாதனை:
1. இப்போட்டியில் கடைசி இன்னிங்ஸ்சில் 196 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் அதிக பட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் மைக்கல் அத்தர்டன் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 4-வது இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன்களின் பட்டியல் இதோ:
1) பாபர் அசாம் : 196 V ஆஸ்திரேலியா, கராச்சி, 2022*.
2) மைக்கேல் அத்தர்டன் : 185 V தென்ஆப்பிரிக்கா, 1995.

- Advertisement -

2. இந்த போட்டியில் மொத்தம் 504 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 பந்துகளை சந்தித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். இதற்கு முன் எந்த ஒரு பாகிஸ்தான் வீரரும் ஒரு போட்டியில் 400 பந்துகளை எதிர்கொண்டது கிடையாது என்ற நிலையில் முன்னாள் வீரர் சோயப் மாலிக் 369 பந்துகளை எதிர்கொண்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

pak

3. இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4-வது இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பாகிஸ்தான் வீரர் மற்றும் கேப்டன் போன்ற சாதனைகளை படைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து அசத்தினார்.

இப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றியை தடுத்து நிறுத்தி ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இந்திய ரசிகர்கள் கூட தங்களது சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement