
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோற்றது. 2009 டி20 சாம்பியனான பாகிஸ்தான் சமீப காலங்களாகவே கத்துக்குட்டியாக கருதப்படும் எதிரணிகளிடம் தடுமாறி வருகிறது. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து 2023 ஆசிய கோப்பையில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் அவமான தோல்வியை சந்தித்தது. அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் பரிதாபத் தோல்வியை பதிவு செய்துள்ளது. அப்போட்டியில் முதல் 6 ஓவர்களில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்கத் தவறியதுமே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.
நெருங்க முடியாது:
ஆனால் உண்மையில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 20 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து மிகவும் மெதுவாக விளையாடினார். அதே வேகத்தில் விளையாடிய அவர் கடைசியில் 44 (43) ரன்களில் அவுட்டானது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் இப்படி கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படும் பாபர் அசாம் இந்திய வீரர் விராட் கோலியின் காலணிகளுக்கு கூட நெருங்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் அணியில் திறமையை பார்க்காமல் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவே பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் சதமடித்ததும் அடுத்த நாள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை உங்களால் பார்க்க முடியும்”
“ஆனால் அவரால் விராட் கோலியின் காலணிகளை கூட நெருங்க முடியாது. அமெரிக்க பவுலர்கள் அவரை சிக்க வைத்தனர். அவர்களுக்கு எதிராக பாபர் அசாம் விளையாட முடியாமல் திணறினார். 40+ ரன்களில் அவுட்டான அவர் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அது பாகிஸ்தான் ஒரு தலைப்பட்சமாக வெல்ல வேண்டிய போட்டியாகும். இந்தியாவை தோற்கடிக்கும் திறமை அவர்களிடம் இல்லை”
இதையும் படிங்க: பிட்ச்ச ரெடி பண்ணவங்களுக்கே என்ன நடக்குதுன்னு தெரியல.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – ரோஹித் வெளிப்படை
“உலகக் கோப்பை வரும் போதெல்லாம் அவர்கள் தங்களுடைய பவுலிங் பற்றி பாராட்டுகின்றனர். ஆனால் அது தான் முதல் போட்டியில் அவர்களுடைய தோல்விக்கு காரணமாகும். அவர்களுடைய ஈகோ எப்போதும் முடிவடைவதில்லை. பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்” என்று கூறினார்.