டான் ப்ராட்மேனுக்கு எங்க பாபர் அசாம் கொஞ்சமும் குறைஞ்சவர் இல்ல – முன்னாள் பாக் வீரர் பாராட்டு, கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் டாம் லாதம் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணியை மழைக்கு மத்தியில் தோற்கடிக்க முடியாத பாகிஸ்தான் 2 – 2 (5) என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது. குறிப்பாக கடந்த வருடம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளிடம் தொடர் தோல்விகளை சந்தித்து கிண்டல்களுக்கு உள்ளான பாகிஸ்தான் அடுத்ததாக அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இருப்பினும் அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய பாகிஸ்தான் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளைப் பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. இந்த 4 தொடர் வெற்றிகளால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ப்ராட்மேனுக்கு நிகராக:
குறிப்பாக 1973 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் பாகிஸ்தான் இம்ரான் கான் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்சமாம்-உல்-ஹக் தலைமையில் நீண்ட நாட்கள் வெற்றி நடை போட்ட போதிலும் 50 வருடங்களில் தற்போது தான் முதல் முறையாக ஒருநாள் தரவரிசையில் பாபர் அசாம் தலைமையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. அதை விட 4வது போட்டியில் சதமடித்த பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி (தலா 104) ஹாசிம் அம்லா (101) ஆகியோரை முந்தி அதிவேகமாக 5000 ரன்கள் அடித்த வீரராக (97 இன்னிங்ஸ்) உலக சாதனை படைத்தார்.

குறிப்பாக 100 இன்னிங்ஸ்களுக்குள் 5000 ரன்களை அடித்த வீரராகவும் சாதனை படைத்த அவர் நவீன கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் மகத்தான பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். அப்படி கடந்த சில வருடங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் இந்தியாவின் விராட் கோலியை விட சிறந்தவர் என்றும் சச்சினுக்கு சமமானவர் என்றும் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாபர் அசாமை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பாபர் அசாம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சார் டன் ப்ராட்மேனுக்கு கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் மற்றும் தலைவர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்துல அவர் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் டான் ப்ராட்மேனுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல. குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புள்ளி விவர அடிப்படையில் அவர் உலகின் சிறந்த வீரராக இருக்கிறார். இந்த ரிஸ்க்கான ஒருநாள் கிரிக்கெட்டில் அவரைப் போல் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் வீரரை நான் பார்த்ததில்லை”

“அவருடைய டெக்னிக் மற்றும் பொறுமையாக செயல்படும் குணம் தான் இந்த வெற்றிகளுக்கு அடிப்படையாகும். அத்துடன் பச்சை புற்களுடன் கூடிய பிட்ச் அல்லது கராச்சி போல சுழலுக்கு சாதகமான பிட்ச் என எந்த வகையான சூழ்நிலையிலும் தடுமாறும் அளவுக்கு அவரிடம் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 99.94 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ள டான் ப்ராட்மேன் எப்போதுமே யாராலும் தொட முடியாது ஜாம்பவான் என்று வரலாற்றில் சச்சின், பிரைன் லாரா போன்ற பல மகத்தான வீரர்களே பாராட்டியுள்ளனர்.

- Advertisement -

மறுபுறம் சமீப காலங்களாகவே பாகிஸ்தான் பெரும்பாலும் ஜிம்பாப்வே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தரவரிசையில் கீழே தவிக்கும் அணிகளுக்கு எதிராகவே அதிக போட்டிகளில் விளையாடுகிறது. அதை பயன்படுத்தி பெரிய ரன்களை எடுத்து சாதனைகளை படைத்து வரும் பாபர் அசாமை ஏற்கனவே ரசிகர்கள் கலாய்த்து வருவது வழக்கமாகும்.

இதையும் படிங்க:IPL 2023 : பேசாம உங்க பெயர அப்டி மாத்திக்கோங்க, ரோஹித் சர்மாவை விளாசிய ஸ்ரீகாந்த் – ரசிகர்கள் கொந்தளிப்பு

சொல்லப்போனால் இந்த தொடரில் கூட முக்கிய வீரர்கள் இல்லாத நியூசிலாந்தை அடித்த அவரை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் காலங்கள் கடந்தும் காவியத்தலைவனாக நிற்கும் டான் ப்ராட்மேன் அவர்களுடன் ஒப்பிட்ட ரமீஸ் ராஜாவை தற்போது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக உங்களுடைய யூடியூப் சேனலுக்கு அதிக ரேட்டிங் வரவேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச வேண்டாம் என்று ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement