பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் விளையாட பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறின. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டியானது இன்று கராச்சி நகரில் நடைபெற்று வருகிறது.
பாபர் அசாம் நிகழ்த்தியுள்ள மாபெரும் சாதனை :
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியானது 25 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை குவித்துள்ளது.
இந்த போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய பாபர் அசாம் 34 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் இந்த இன்னிங்ஸின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
குறிப்பாக விராத் கோலியை பின்னுக்கு தள்ளி ஹாசிம் ஆம்லாவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்த வகையில் இன்று பாபர் அசாம் அடித்த 29 ரன்களோடு சேர்த்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் 6000 ரன்களை கடந்துள்ளார்.
ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா முதலிடத்தில் இருந்தார். ஆம்லா தனது 123-வது இன்னிங்ஸில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் பாபர் அசாமும் 123-வது இன்னிங்சில் 6000 ரன்களை கடந்து அவரது சாதனையை சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : எல்லா நாளும் பும்ரா வரமாட்டாரு.. இதை செஞ்சா அவங்களே வெச்சே ஜெய்க்கலாம்.. இந்தியாவுக்கு ஹர்பஜன் அட்வைஸ்
இவர்கள் இருவருக்கு அடுத்து விராட் கோலி 136 இன்னிங்ஸ்களிலும், வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் 139 இன்னிங்ஸ்களிலும், தவான் 140 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



