ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மறுபுறம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. சொல்லப்போனால் 2023 உலகக் கோப்பை உட்பட சமீப காலங்களாகவே பாகிஸ்தான் அணி கத்துக்குட்டிகளுக்கு எதிராக தோல்விகளை சந்தித்து வருகிறது.
அந்த வரிசையில் இம்முறை அமெரிக்காவிடம் முதல் போட்டியிலேயே அதுவும் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது. அத்துடன் இந்தியாவிடம் வெறும் 120 ரன்களை அடிக்க முடியாமல் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் காரணமாக பாகிஸ்தான் அணி கடுமையான கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
ரோஹித்தை பாருங்க:
இந்த தோல்விகளுக்கு கேப்டன் பாபர் அசாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முடியாமல் திணறும் அவர் கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறார். இந்நிலையில் பாபர் அசாமுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் டாப் அணிகளின் பிளேயிங் லெவனில் கூட இடம் கிடைக்காது என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் தேர்வுக்குழு சொன்னதும் அடித்து நொறுக்கும் புதிய அணுகுமுறையை பின்பற்றி வெற்றி கண்ட ரோஹித் சர்மாவை அவர் பார்க்க வேண்டும் எனவும் சோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நம்முடைய சிறந்த வீரர் யார்? அது பாபர் அசாம். இங்கே நான் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் 4 – 5 அணிகளைப் பற்றி பேசுகிறேன்”
“குறிப்பாக ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் பாபர் அசாம் பொருந்துவாரா? பதில் கண்டிப்பாக இல்லை. நம் அணிகளில் புதிதாக வரும் தலைவர் அல்லது தேர்வுக் குழுவிடம் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. அது போன்ற சூழ்நிலையில் களத்தில் விளையாடும் நீங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நம் வீரர்கள் புரிந்து கொள்வதில்லை”
இதையும் படிங்க: பாவம் பாண்டியா.. தோனி, விராட் ரோஹித் மாதிரி செஞ்சுருக்கணும்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்
“எடுத்துக்காட்டாக இந்திய தேர்வுக் குழுவினர் இப்படி விளையாடக்கூடாது இன்று ரோகித் சர்மாவிடம் கூறியுள்ளனர். அதனால் ரோகித் தமக்கு தாமே ஒரு புதிய வழியை உண்டாக்கினார். எனவே உங்கள் கீழே இருக்கும் விஷயங்கள் நன்றாக இல்லாததால் புதிய விஷயத்தை துவக்க வேண்டும். பாகிஸ்தான் அணியில் வேலை நடக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால் அதை தெரிந்து கொள்ள கடவுளின் உதவியை நாடினால் தான் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.



