பாவம்யா மனுஷன்.. போராடியும் செஃல்ப் எடுக்காத பாகிஸ்தான்.. முதல் ஆசிய வீரராக பாபர் பரிதாப சாதனை

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் அந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியிலும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஏமாற்ற தோல்வியை சந்தித்தது.

டுனிடின் நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 224/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் ஃபின் ஆலன் பாகிஸ்தான் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கி 5 பவுண்டரி 16 சிக்சருடன் சதமடித்து 137 (62) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

பரிதாப சாதனை:
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்த அவர் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் (16) அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் சமன் செய்தார். மறுபுறம் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 225 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் சாய்ம் ஆயுப் 10, முகமத் ரிஸ்வான் 24 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்ப்புறம் பகார் ஜமான் 19, அசாம் கான் 10, இப்திகார் அகமது 1 என முக்கிய வீரர்கள் கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய பாபர் அசாமும் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தானை 179/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்தார்.

- Advertisement -

முன்னதாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து சாதாரணமாக விளையாடி வருகிறார். அந்த வகையில் கேப்டன்ஷிப் அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாடும் அவர் இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் முறையே 66, 57, 58 ரன்கள் அடித்து முடிந்தளவுக்கு போராடியும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் வெற்றி பெற முடியவில்லை.

இதையும் படிங்க: 6, 4, 4, 6, 6.. ஒரே ஓவரில் 28 ரன்ஸ்.. முரட்டு அடி வாங்கிய 150 கி.மீ பாகிஸ்தான் பவுலர்.. மோசமான சாதனை

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் தோல்வியை சந்தித்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற பரிதாபமான சாதனையையும் பாபர் அசாம் படைத்துள்ளார். அதனால் பாவம்ய்யா மனுஷன் என்று அவர் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் ரசிகர்கள் எஞ்சிய வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement