
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாடுகிறது. லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
அந்த போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிரியமானதுடன் ஓய்வு பெற்றார். கடந்த 2002 முதல் விளையாடிய அவர் 2010க்குப்பின் தம்முடைய அனுபவத்தால் முன்னேறி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற உலகின் நிறைய மகத்தான பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தார். மேலும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 வயது கடந்தும் அவர் அசத்தலாகவே விளையாடினார்.
பாபர் அசாம் பரிதாபம்:
அந்த வகையில் 188 போட்டிகளில் விளையாடிய அவர் சச்சினுக்கு பின் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரராக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 704 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் வரலாறு படைத்துள்ளார்.
இருப்பினும் தற்போது 41 வயதை கடந்து விட்ட ஆண்டர்சன் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதனால் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் ஆண்டர்சனை வாழ்த்தி பாராட்டி வழியனுப்பினர். அதே போல சச்சின் டெண்டுல்கர் போன்ற நிறைய முன்னாள் இந்நாள் வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் சேர்ந்த பாபர் அசாம் உங்களுடைய கட்டர் பந்துகளை எதிர்கொண்டதில் கௌரவமடைந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சனை ட்விட்டரில் பாராட்டினார்.
இது பற்றி அவர் பதிவிட்டது பின்வருமாறு. “உங்கள் கட்டர்களை எதிர்கொள்வது ஒரு பாக்கியம் ஜிம்மி. இந்த அழகான விளையாட்டு அதன் சிறப்பான ஒன்றை இழக்கும். விளையாட்டிற்கு உங்களின் அசாத்திய சேவை குறிப்பிடத்தக்கது. உங்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. கோட்” என்று பதிவிட்டார். அதைப் பார்த்து ரசிகர்கள் ஸ்விங் செய்வதில் வல்லவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் எப்போது எங்களுக்கு தெரியாமல் கட்டர் பந்துகளை வீசினார்? என்று பாபர் அசாமை கிண்டலடித்தனர்.
இதையும் படிங்க: அதிகம் பேச மாட்டாரு.. ஆனா அதை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டாரு.. கம்பீர் கோச்சிங் பற்றி ஆவேஷ் கான்
ஏனெனில் பொதுவாக 130 – 140+ கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஸ்விங் செய்து வீசக்கூடிய ஆண்டர்சன் தம்முடைய கேரியரில் கட்டர் பந்துகளை அதிகம் வீசியதே கிடையாது. ஆனால் அவருடைய கட்டர் பந்துகளை எதிர்கொண்டதாக பாபர் அசாம் உருட்டலான வாழ்த்தை தெரிவித்தார். அதை ரசிகர்கள் கிண்டலடித்ததால் உடனடியாக பாபர் அசாம் அந்தப் பதிவை டெலிட் செய்தார். அதன் பின் “கட்டர்” என்ற வார்த்தையை நீக்கிய அவர் “ஸ்விங்” என்ற வார்த்தையை சேர்த்து அதே வாழ்த்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.