PAK vs NZ : அசத்தும் பாக், முஹமது யூசுஃபை முந்திய பாபர் அசாம் – ரிக்கி பாண்டிங் சாதனையும் தகர்த்து புதிய உலக சாதனை

Babar Azam Ricky Ponting
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை உட்பட பெரும்பாலான தொடர்களில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தானின் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். அத்துடன் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் நட்சத்திரம் சாகித் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டார். அந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்த அவர் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தார்.

அதைத்தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதியன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் நியூசிலாந்தின் சுழலில் சிக்கி அப்துல்லா சபிக் 7, சான் மசூட் 3, இமாம்-உல்-ஹக் 24 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலே சொற்ப ரன்களில் அவுட்டாகி பாகிஸ்தானுக்கு ஏமாற்றளித்தனர். அதனால் 48/3 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக நின்று ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

கேப்டனாக உலக சாதனை:
அவருக்கு கை கொடுத்து 4வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சவுத் ஷாக்கீல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கிய சர்பராஸ் அகமத் கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தது தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். உணவு இடைவெளிக்கு பின் ஜோடி சேர்ந்த இவர்கள் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று நியூசிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி பாகிஸ்தானை முழுமையாக மீட்டெடுத்தார்கள்.

அதில் சிறப்பாக செயல்பட்ட பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 9வது சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சர்ப்ராஸ் அஹமத் 5வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தார். தனது கம்பேக் போட்டியில் அபாரமாக செயல்பட்டு 9 பவுண்டரியுடன் சதத்தை நெருங்கிய அவர் கடைசி நேரத்தில் துரதிஷ்டவசமாக 86 ரன்களில் அவுட்டாகி சென்றார். இறுதியில் முதல் நாள் முடிவில் 317/5 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தானுக்கு களத்தில் பாபர் அசாம் 161* ரன்களுடனும் ஆஹா சல்மான் 5* ரன்களுடனும் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் பட்டேல் மற்றும் மைக்கேல் ப்ரெஸ்வெல் ஆகியோர் தலா 2* விக்கெட்களை சாய்ந்துள்ளனர்.

- Advertisement -

முன்னதாக இந்த வருடம் சந்தித்த தோல்விகளில் கேப்டனாக தலைமை தாங்கிய பாபர் அசாம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் எதற்கும் வளைந்து கொடுக்காமல் இப்போட்டியில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிக்சருடன் தன்னுடைய 9வது டெஸ்ட் சதத்தை விளாசினார். அதனால் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ள அவர் இப்போட்டியில் குவித்த 161 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 25 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை கேப்டனாக குவித்துள்ளார்.

அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த கேப்டன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 25* (2022)
2. ரிக்கி பாண்டிங் : 24 (2005)
3. மிஸ்பா-உல்-ஹக் : 22 (2013)
4. விராட் கோலி : 21 (2017)
5. விராட் கோலி : 21 (2019)

- Advertisement -

அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற முகமது யூசுப் சாதனையும் தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 2477* (2022)
2. முகமது யூசுப் : 2435 (2006)
3. சயீத் அன்வர் : 2296 (1996)
4. முகமது யூசுப் : 2226 (2002)
5. இன்சமாம்-உல-ஹக் : 2164 (2000)

இதையும் படிங்கசென்னை அணியின் கேப்டன் யார்? இவரா? அவரா? – வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் பதில்

மேலும் இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக 1000+ ரன்கள் குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்கள் குவித்த முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற சரித்திரத்தையும் படைத்தார். இதற்கு முன் கடந்த 2005ஆம் ஆண்டு முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் 999 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement