இந்திய கிரிக்கெட் அணி 2025 ஆசியக் கோப்பையை சூரியகுமார் யாதவ் தலைமையில் வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் பரம எதிரி பாகிஸ்தானை 3 முறை எதிர்கொண்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் 20/3 என சரிந்த இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது அபாரமாக விளையாடிய திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே இந்தியாவை காப்பாற்றி பாகிஸ்தானை தோற்கடிக்க உதவினார்கள். அதையும் சேர்த்து 2021க்குப்பின் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 8 போட்டிகளில் இந்தியா 8 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது என்றே சொல்லலாம்.
சூரியகுமார் கருத்து:
முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் அண்டை நாடுகள் என்பதுடன் அடிக்கடி எல்லையில் மோதுவது வழக்கமாகும். அதனால் இந்தியா – பாகிஸ்தானை பரம எதிரிகள் என்று வர்ணனையாளர்கள் வர்ணிப்பார்கள். ஆனால் தம்மைப் பொறுத்த வரை இனிமேல் இந்திய அணிக்கு பாகிஸ்தான் எதிரி அல்லது போட்டியாளர் கிடையாது என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.
இரு அணிகள் விளையாடும் போது 7 – 7, 8 – 7 என்ற கணக்கில் முடிவுகள் இருந்தால் மட்டுமே போட்டி என்று சொல்லலாம் என சூரியகுமார் யாதவ் தெரிவித்தார். எனவே பாகிஸ்தான் அணி இனிமேலும் இந்தியாவுக்கு எதிரி அல்லது போட்டியாளர் கிடையாது என்று சூரியகுமார் வெளிப்படையாக தெரிவித்தார். அதற்கு வழக்கம் போல பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
உண்மை தானே:
குறிப்பாக சூரியகுமார் பன்றிகுமார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் விமர்சித்தார். மேலும் நடுவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு வெற்றி பெறுவதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் என்றும் யூசுப் விமர்சித்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு இனிமேலும் பாகிஸ்தான் போட்டியாளர் கிடையாது என்று சூரியகுமார் சொன்னது உண்மை என அந்நாட்டு வீரர் அசாம் கான் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 89/5 டூ 255.. தெ.ஆ அணிக்கு எதிராக தனியாளாக போராடி இந்தியா ஏ’வை சேர்த்த துருவ் ஜுரேல்.. அபார சதம்
ஏனெனில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் போட்டியை கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் ஐசிசி தொடர்களை பார்த்தால் அது உண்மை என்று எனக்கு தோன்றுகிறது. இதை சொல்ல வேண்டுமா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் டெக்னிக்கல் அடிப்படையில் சூரியகுமார் சொன்னது சரி” என்று கூறினார்.



